சென்னை: அதிமுக தொண்டர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் எப்படி முதல்வர் ஜெயலலிதாவை வணங்க வேண்டும் என்பது குறித்து பயிற்சி அளிக்க அமைச்சர் பன்னிர்செல்வம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இது குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத அதிமுக பிரமுகர் சொல்லியது: இப்போது நிதி அமைச்சர் ஒ. பன்னிர்செல்வம் மட்டும்தான் மிகவும் சிரத்தை எடுத்து அம்மாவை கும்பிடுகிறார். அவர் பின்பற்றும் உடம்பை வளைத்து, தலையை தாழ்த்தி வணக்கம் சொல்லும் பாங்கு மற்ற அமைச்சர்களுக்கோ அல்லது தொண்டர்களுக்கோ வரவில்லை. இதனால் அமைச்சர்களும் தொண்டர்களும் மிகுந்த மன உளைச்சலில் இருக்கின்றனர். இது குறித்து சமீபத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டது.
தொண்டர்களின் மனக்குறையை போக்க பாபா ராம்தேவ் உதவியுடன் அம்மாவை எப்படி வணங்குவது குறித்து அதிமுக அமைச்சர்கள் மற்றும் தொண்டர்களுக்கு பயிற்சி கொடுக்க மையங்கள் அமைக்க அமைச்சர் பன்னிர்செல்வம் முடிவு செய்துள்ளார்.
மூன்று கட்டமாக நடக்கும் இந்த பயிற்சியில் முதலில் அமைச்சர்களும், பிறகு தொண்டர்களும் கலந்து கொள்வர். பொதுமக்களுக்கு இந்த பயிற்சி கட்டாயமல்ல ஆனால் விருப்பமுள்ளவர்களுக்கு அனுமதி இலவசம். உங்கள் நியூஸ் செய்தியாளர் பாபா ராம்தேவை தொடர்பு கொள்ள முயன்றபோது அவர் ‘பதஞ்சலி நூடுல் புழு’ பிரச்சினையில் பிஸியாக இருப்பதாக அவரது உதவியாளர் கூறி தொடர்பை துண்டித்தார்.
There are no comments yet
Or use one of these social networks