பொங்கல் பானையை எட்டி உதைத்தார் விஜயகாந்த்: பொங்கல் கொண்டாடுவதில்லை என சபதம்

2658

சென்னை: தமிழக முதல்வர் கொடுத்த பொங்கல் பரிசான இலவச அரிசியையும் சர்க்கரையையும் தன் தொண்டர்கள் முன்னிலையில் இன்று சோதனை செய்தார் விஜயகாந்த். சென்னை கோடம்பாக்கத்தில் ஒரு பிரபல ஸ்டுடியோவில் நடந்த இந்த நிகழ்ச்சியில், விஜயகாந்தும் அவரது மனைவி பிரேமலதாவும், தொண்டர்களோடு பொங்கல் வைக்க முயற்சித்தனர்.

தமிழக அரசின் இலவச அரிசியையும் சர்க்கரையையும் பானையில் தண்ணீரோடு கலந்து பிரேமலதா கிண்டினார். அவருக்கு விஜயகாந்தும், ஒரு மகளிர் அணி நடிகையும் உதவி செய்தனர். நீண்ட நேரமாகியும், பொங்கல் பொங்காததால் எரிச்சலடைந்த விஜயகாந்த் த்தூ எனக்கூறி பானையை தனக்கே உரித்தான சினிமா பாணியில் ஓங்கி உதைத்தார், இதை பார்த்த கூடியிருந்த ரசிகர்களும், தொண்டர்களும் ‘அய்யோ கேப்டனுக்கு கோவம் வந்திருச்சுடா’ என்று அலறி ஓடினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த் ‘ஜெயலலிதா போலி அரிசியும், சர்க்கரையும் கொடுத்து மக்களை ஏமாற்றி விட்டார். உங்கள் முன்னிலையில் இன்று நடந்த நிகழ்ச்சியில் ஜெயலலிதாவின் பொங்கல் அரிசி பொங்கவில்லை, இனிமேல் நான் பொங்கல் கொண்டாடப்போவது இல்லை. பொங்கல் எனக்கு ஒரு கருப்பு நாள் . ஜெயலலிதாவுக்கு வரும் தேர்தலில் மக்கள் தக்க பாடம் கற்பிப்பார்கள் ‘த்தூ’ என்று சீறினார்.

இது பற்றி அருகில் இருந்த தொண்டர் கூறும்போது, கேப்டன் அடுப்பை பற்ற வைக்க மறந்துவிட்டார். நெருப்பே இல்லாமல் பொங்கல் எப்படி பொங்கும் என்று கூறி அனைவரயும் சிரிக்கவைத்தார்.

There are no comments yet