​எதிர்கட்சிகளை முறியடிக்க ஜெ திட்டம் – 234 தொகுதிகளிலும் தானே போட்டியிட முடிவு

317

​சென்னை: தமிழகத்தில் தேர்தல் சூடு பிடித்து வரும் நேரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணிக்கு அலைந்து வரும் நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா தானே அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது பற்றி போயஸ் கார்டனுக்கு நெருக்கமான ஒரு அடிமை அமைச்சர் அம்மாவின் ஆணைக்கிணங்கி கூறியதாவது.

தற்போதுள்ள சூழ்நிலையில் மக்கள் மனதை கவர்ந்த ஒரே தலைவர் அம்மாதான். கட்சியில் உள்ள அனைத்து அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மேல் மக்கள் வெறுப்பாக உள்ளனர். சென்னை வெள்ளம் மற்றும் ஸ்டிக்கர் பிரச்சினைக்கு பிறகு நாங்கள் யாரும் வெளியே தலை காட்ட முடியவில்லை. ஆகவே வரும் தேர்தலில் வெற்றி பெற ஒரே வழி அனைத்து தொகுதிகளிலும் அம்மாவே போட்டியிடுவதுதான். இது குறித்து சட்ட வல்லுனர்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது. அடிக்கடி அம்மா கொட நாட்டுக்கும், கர்நாடகா ஜெயிலுக்கும் போவதினால், அந்த சமயத்தில் ‘பேக் அப்’ ஆக இருக்க வேண்டும் என்பதற்காக அண்ணன் ஓபி க்கு மட்டும் ஒரு சீட்டு கிடைக்கும் என நினைக்கிறேன் என்றார்.

உங்கள் நியூஸ் நிருபர் ‘ரிசர்வ்டு‘ தொகுதிகளில் மேடம் எப்படி போட்டியிடுவார்கள் என்று கேட்டதற்கு ‘அம்மாவே ஒரு ரிசர்வ்டு டைப் தான்‘ இதுதான் எல்லாருக்கும் தெரியுமே என்று கூறி அதிர வைத்தார்.

There are no comments yet