சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் கபாலி படத்தின் டீசர் யூடியூப் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ரஜினி – இயக்குநர் பா. இரஞ்சித் கூட்டணியில் உருவாகும் படம் – கபாலி. இந்தப் படத்தில் சென்னையைச் சேர்ந்த தாதா கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கிறார். கபாலி படம் மே மாதம் கடைசி வாரம் அல்லது ஜூன் மாத ஆரம்பத்தில் வெளியாகலாம் என்று சமீபத்தில் தகவல் தெரிவித்தார் ரஜினி. இப்போது கபாலி படத்தின் சுமார் ஒரு நிமிஷம் ஓடும் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அடுத்த ஆண்டுக்கான தேசிய விருதை கபாலி டீசருக்கும், சிறந்த நடிகருக்கான தங்கத் தாமரை விருதை ரஜினிக்கும் இப்போதே வழங்கினால் ரஜினியை எப்படியும் தேர்தல் பிரச்சாரத்திற்கு வளைத்துப் போட்டு விடலாம் என பாஜக கணக்குப் போட்டு இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த விருதுகளை நடக்க இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக வழங்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. தமிழக பாஜக தலைவர் தமிழ் இம்சை இது குறித்து மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்து பேசி எப்படியும் தேர்தலுக்கு முன்பே ரஜினியின் கபாலி டீசருக்கு தேசிய விருது ஏற்பாடு செய்ய கோரிக்கை விடுத்துள்ளார். இதன் மூலம் லட்சக் கணக்கான ரஜினி ரசிகர்களின் ஓட்டுக்களை அள்ளவும் பாஜக திட்டமிட்டுள்ளது.
இது பற்றி பொன். ராதாகிருஷ்ணன் கூறும்போது, இப்போ எங்களிடம் பவர் ஸ்டார் இருக்கார், ஆனா சூப்பர் ஸ்டார் இல்லை, ரஜினியின் கபாலி டீசருக்கு தேசிய விருது கொடுப்பதின் மூலம் அவரை கண்டிப்பாக எங்கள் கட்சிக்கு கொண்டுவந்து விடுவோம். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல், இந்த ஒரு நிமிட டீசரே போதும், படம் எப்படி இருக்கும் என்பதற்கு. எனவே கபாலிக்கு தேசிய விருது வழங்குகிறோம் என்றார்.
ஒரு படத்தின் டீசருக்கு தேசிய விருது வழங்கப்படுவது இந்திய திரைப்பட வரலாற்றிலேயே இது தான் முதல் முறை என்பதால் கோலிவுட் வட்டாரங்களில் இந்த செய்தி பரபரப்பாக பேசப்படுகிறது. ரஜினி எல்லாவற்றிலுமே வித்தியாசமாக சாதனை படைப்பவர் என்பது அனைவரும் அறிந்ததுதானே.
There are no comments yet
Or use one of these social networks