அரவக்குறிச்சி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் அப்போதைய மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் துப்பு துலக்க ஆ.ராசாவின் நண்பரும், கிரீன் ஹவுஸ் ப்ரோமோட்டர்ஸ் நிர்வாகியுமான சாதிக் பாட்சாவிடம் விசாரணை நடத்த சிபிஐ நடவடிக்கை மேற்கொள்ள இருந்தது.

இந்த நிலையில், கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனது வீட்டில் சாதிக் பாட்சா பிணமாகக் கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில், திமுக புள்ளிகளின் நெருக்கடியினால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியது.

இந்த நிலையில், திருச்சியில் நேற்றிரவு திடீரென செய்தியாளர் சந்திப்பு நடத்திய, அரியலூர் மாவட்டம், அய்யூரை சேர்ந்த பிரபாகரன் என்பவர், தான் தமிழர் நீதிக்கட்சியின் தலைவர் சுப.இளவரசனின் உதவியாளர் என்றும், ஆ.ராசாவின் மைத்துனர் பரமேஸ்குமார், முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஜாபர்சேட் ஆகியோருடன் சேர்ந்து சாதிக் பாட்சாவை கொலை செய்ததாகவும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். மேலும், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால், இந்த ரகசியத்தை தற்போது வெளியிடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதுகுறித்து கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சாகித் பால்வாவிடமிருந்து வந்த பெரும்பாலான பணம் ஸ்டாலினிடம்தான் கொடுக்கப்பட்டது. மேலும் சாதிக் பாட்சாவுக்கு கிடைத்த பணத்தின் பெரும் பகுதி ஸ்டாலினுக்கு தரப்பட்டது. ஸ்டாலின் குறித்து சிபிஐக்கு சாதிக் பாட்சா அறிக்கை கொடுத்துள்ளார். நீரா ராடியா- கனிமொழி தொலைபேசி உரையாடலில் சாதிக் பாட்சாவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் நண்பர் சாதிக் பாட்சா கொலை செய்யப்பட்டுள்ளார். தான் கொலை செய்யப்பட்டு விட்டதாக சாதிக் பாட்சாவே என்னிடம் சொன்னார். இதற்கான ஆதாரங்களை 2021 தேர்தலுக்கு அப்புறம் வெளியிடுவேன்.

இது தொடர்பாக திருச்சியை சேர்ந்த பிரபாகரன் கூறிய தகவல்கள் அனைத்தும் உண்மையே. 2011ல் அரியலூரில் வைத்து இதே பிரபாகரன் என்னை சந்தித்து இந்த தகவல்களை கூறினார். அனால் அப்போது எனக்கு இதை வெளியிட மனமில்லை, அதோடு சாதிக் பாட்சாவும் இந்த விஷயத்தை பெரிது படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். எனவே சாதிக் பாட்சா மரணம் குறித்தும் சிபிஐ விசாரிக்க வேண்டும். அப்போதுதான் உண்மை வெளியே வரும் என்று கூறினார்.

There are no comments yet