புதுச்சேரி: புதுவையில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 15 இடங்களையும், கூட்டணி கட்சியான திமுக 2 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சி அமைவது உறுதியாகியுள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சியில் முதல்வராவது யார் என்ற இழுபறி ஏற்பட்டது. மாநில தலைவரான நமச்சிவாயம் முதல்வராக வேண்டும் என காங்கிரசில் ஒரு பிரிவினரும், காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியபொதுச்செயலாளரான நாராயணசாமி முதல்வராக வேண்டும் என மற்றொரு தரப்பினரும் கட்சித்தலைமையை வலியுறுத்தினர். இதனால் முதல்வர் பதவியேற்பதில் இழுபறி நீடித்து வந்தது.
இந்நிலையில் புதுச்சேரி முதல்வராக நாராயணசாமியை நியமிக்க ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த எதிர் கோஷ்டி கூறியதாவது: புதுச்சேரி, கடலூர், சென்னை நகரங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி மக்களுக்கு நேரிடையாக நிவாரண உதவிகளை வழங்கினார். அப்போது வெள்ள நீர் சூழ்ந்த ஒரு இடத்தை ராகுல் காந்தி பார்வையிட சென்றபோது, அவர் தான் அணிந்திருந்த ‘ஷூ’வை கழற்றினார். நாராயணசாமி தனது கையில் ஒரு ஜோடி ரப்பர் செருப்பை கையில் வைத்தபடி நின்றுகொண்டு, பின்னர் அதனை ராகுல் காந்தி காலில் போட்டுக்கொள்ள உதவினார். இதனால் தான் நாராயணசாமியை முதல்வர் ஆக்கி உள்ளனர்.
எனவே நாங்களும் இன்றே டெல்லி சென்று ராகுல் காந்தியின், அனைத்து ஷூ, செருப்புகளை எடுத்து தலையில் வைத்துக் கொள்வோம், அப்படியும் எங்களுக்கு கோஷ்டிக்கு முதல்வர் பதவி கொடுக்காவிட்டால் அன்னை சோனியா, அக்கா பிரியங்கா ஆகியோரின் செருப்புகளையும் கேட்டு வாங்கி தலையில் வைத்துக் கொள்வோம் என் ஆவேசமாகக் கூறி டெல்லி சென்றனர்.
There are no comments yet
Or use one of these social networks