பெங்களூர்: இசையமைப்பாளர் இளையராஜா குடும்பத்தினருடன் மங்களுர் பகுதியில் உள்ள கோயில்களுக்கு தரிசனம் செய்ய சில தினங்களுக்கு முன்பு சென்றிருந்தார். நேற்று முன்தினம் இரவு அவர்கள் சென்னை திரும்புவதற்காக பெங்களூர் ஏர்போர்ட்டுக்கு வந்துள்ளனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள், இளையராஜாவின் பையை சோதனையிட்டனர். அதில் சாமிக்கு அர்ச்சனை செய்த தேங்காய்கள் இருந்துள்ளது. அதை பார்த்த அதிகாரிகளுக்கு தேங்காயில் பாம் உள்ளதோ என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. உடனே, இளையராஜாவையும், அவரது குடும்பத்தினரையும் தனியாக நிற்க வைத்தனர். மேலும் அவர்களது உடைமைகள் அனைத்தையும் ஸ்கேன் செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அங்கு இளையராஜாவுடன் வந்தவர்களுக்கும், பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அந்த அதிகாரிகளையும், விமான நிலைய பாதுகாப்பு போலீசாரையும் பார்த்து மிரண்ட இளையராஜாவின் மகன் கார்த்திக்ராஜா எங்களிடம் ஜண்டு பாம் மட்டும்தான் இருக்கிறது என்று அதிகாரிகளிடம் விளக்கியுள்ளார். சுமார் 1 மணி நேரத்திற்கு பிறகு எல்லா ilayarajaதேங்காய்களையும் உடைத்து சட்னி செய்த பின்பு இளையராஜா குடும்பத்தினரை அதிகாரிகள் விமானத்துக்கு செல்ல அனுமதித்தனர். விமானத்தில் அவர்களுக்கு இட்லியும், இளையராஜா கொண்டு வந்த தேங்காயில் செய்த கெட்டி சட்னியும் வழங்கப்பட்டதாக தெரிகிறது.

இளையராஜா அவமதிக்கப்பட்ட சம்பவத்திற்கு மதிமுக பொது செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்து விடுத்த அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழனை சீண்டிப் பார்ப்பதே இப்போது எல்லோருக்கும் வேலையாகி விட்டது. கேப்டன் விஜயகாந்த் முதல்வராகி இருந்தால் இப்படியெல்லாம் நடக்குமா, அடுத்தமுறை கேப்டனை கர்நாடக முதல்வராக்க அனைவரும் பாடுபடுவோம் என்று கூறினார். தி.மு.க தலைவர் கருணாநிதி இந்த சம்பவம் பற்றி கூறும்போது: கடமை மூன்றெழுத்து, அண்ணா மூன்றெழுத்து, குண்டு என்பது மூன்றெழுத்து, ஆனால் தேங்காய் என்பது நாலெழுத்து எனவே இளையராஜாவை அவமதித்த கர்நாடக அரசை கண்டித்து கடற்கரையில் 10 வினாடி உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளேன் என்று கூறினார். விடுதலை சிறுத்தை திருமா கூறும்போது: ஜாதி வெறி பிடித்த கர்நாடக அரசின் சுய ரூபம் இப்போது தான் வெளிவந்துள்ளது, இதே இளையராஜா ஒரு மேல் சாதி கர்நாடக இசைக்கலைஞர் என்றால் இப்படியெல்லாம் நடக்குமா, நாளை முதல் பெங்களூர் செல்லும் எல்லா விமானங்களையும் ரத்து செய்ய வேண்டும், இல்லாவிட்டால் எனது கட்சியினர் நடுவானில் விமானங்களை தடுத்து நிறுத்தி போராட்டம் செய்வார்கள் என்று சிறுத்தையாக கர்ஜித்தார்.

There are no comments yet