சென்னை: தமிழகத்தில் தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் ‘வரலாறு’ காணாத ‘கணக்கு’ மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அதிர்ச்சி தகவலை கூறி உள்ளது. செவ்வாய் கிரகம் வேறு வாடகை வீடு கிடைக்காமல் ஒரே வீட்டில் இருப்பதால் 400 ஆண்டுகள் இல்லாதபடி மழை பெய்யும், சென்னையை ‘புயல்’ உலுக்கும் என்று ஆற்காடு பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ளதாக சமூக வலைத் தளங்களில் ஒரு செய்தி உலா வருகிறது. இது பற்றி நிருபர்கள் வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரனை முற்றுகையிட்டு கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் “எனக்கும் அந்த செய்தி ‘வாட்சப்’பில் வந்த்தது. ஒவ்வொரு முறை வானிலை அறிக்கை விடும் போதும் துண்டு சீட்டு குலுக்கி போடுவது அல்லது கிளியை விட்டு சீட்டு எடுப்பதுதான் வழக்கம், இம்முறையும் அலுவலக நிர்வாகிகளுடன் சீட்டு குலுக்கி போட்டதில் பஞ்சாங்கப்படி செயல்படும் படி இருந்து உத்தரவு வந்தது. அதன்படி அறிவியலை நம்புவதை விட பஞ்சாங்க அறிவாளிகளை நம்புவதாக முடிவெடுத்து ரெயின் கோட் அணிந்த சிறப்புப் படை ஒன்றை ஓலைச்சுவடிகளைத் தேடி காஞ்சிபுரம் நாடி ஜோதிட மையங்களுக்கு அனுப்பி உள்ளோம்.
வாட்சப்பில் வந்த ஜாதக கட்டத்தில் 9 கட்டதுடன் சேர்த்து 10வதாக ஒரு கட்டம் இருந்தது. அது ‘அபாய கட்டம்’ என்று கண்டு பிடிக்கவே நேரம் பிடித்தது. மேலும் அதில் வெள்ளிக்கிழமை கடல் கொந்தளிப்பு அதிகமும், சரக்குக் கப்பல் ஒன்று திசை மாறி ‘டாஸ்மாக்’ தீவு செல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்ற ஆண்டு டிசம்பரில் அறிவியல் சாதனங்களை நம்பி சொதப்பியதால் சென்னை வெள்ளக்காடக மாறி மக்கள் கண்ணீரிலும் தண்ணீரிலும் நீந்தியது போதும்… இம்முறை அவ்வாறு நடக்காது இருக்க ஓலைச்சுவடிகளில் உள்ள பரிகாரங்கள் அரசு செலவில் செய்யப்படும்” என்று முடித்துக் கொண்டார்.
பொது மக்கள் சிலரிடம் கருத்து கேட்டதில் ஒருவர் பீதியுடன் “கோடிகளைப் போட்டு வாங்கின வில்லா, வெள்ளத்தில் மிதக்குது நல்லா” என்று டைமிங்கில் ஒப்பாரி வைத்தார். பலர் படகு வாங்க லோன் கேட்டு வங்கிகளை முற்றுகை இடப்போவதாக தெரிவித்தனர். முகனூல் போராளிகள் கந்தல் துணி, கரித்துணிகளை அட்டைப்பெட்டிகளில் சேகரித்து வருகின்றனர். அதிமுக தொண்டர் படை ஒன்று ஸ்டிக்கர் அச்சடிக்க சிவகாசி விரைந்துள்ளது என்று ஆளும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
There are no comments yet
Or use one of these social networks