சென்னை: சமீபத்தில் திரைக்கு வந்துள்ள இறைவி திரைப்படத்தில் சினிமா தயாரிப்பாளர்களை அறிவு இல்லாதவர்களாகவும் அரக்கர்களாகவும் சித்தரித்து இருப்பதாகவும் இயக்குனர் ‘கா.சு” கார்த்திக் சுப்புராஜூக்கு இனிமேல் எந்த தயரிப்பளரும் காசு தரப் போவதில்லை என்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. கருத்து சுதந்திரத்தை காப்பாற்ற இந்தியாவை விட்டுப்போகிறோம் என்று முழக்கமிட்ட ஆமிர் கானும், விஸ்வரூப போராளி கமல் ஹாசனும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆப்கானிஸ்தான் செல்ல இருப்பதாகத் தெரிகிறது.
இது பற்றி கார்த்திக் சுப்புராஜ் நம் கப்சா நிருபரிடம் விளக்கம் தந்தார்: “பீட்சா, ஜிகர்தண்டா என்று சாப்பாடு பெயரில் படம் எடுத்து வந்த நான், ‘சரக்கு/சைடிஷ்’ என்ற டைட்டிலைத்தான் தேர்வு செய்து வைத்திருந்தேன். எதிர்பாராத விதமாக அம்மா வரலாறு காணாத வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததால் “இறைவி” டைட்டிலை ஒரு பால்வாடி தமிழாசிரியர் உதவியுடன் தேர்வு செய்தோம். அம்மாவுக்கு ஐசும் ஐய்யாவுக்கு ஆப்பும் வைப்பது போல் ஆரம்ப காட்சியில் ‘தமிழ் தமிழ்னு சொல்லி ஏமாத்துறவனை நம்பக் கூடாது” என்று டயலாக்கும் வைத்தோம். பெண்களை பெருமைப் படுத்தும் படம் என்று விளம்பரம் செய்து சீரியல் பார்க்கும் பெண்களை தியேட்டருக்கு இழுக்கவே சற்று அதிக பொருட்செலவில் ஒரு மெகா சீரியலை படமாக எடுத்துள்ளோம்.
எத்தனையோ வருடங்கள் சினிமாவில் உதவி இயக்குனாராக பணிபுரிபவர்களுக்கு கிடைக்காத வாய்ப்பு நான் எடுத்த ‘துண்டு’ படங்கள் மூலம் எனக்கு சின்ன வயதிலேயே சுலபமாக கிடைத்து விட்டதால் எவனை பற்றியும் எனக்கு கவலை இல்லை. இந்த தயாரிப்பாளர்கள் இல்லை என்றால் என்ன, நாளை ஒரு மிளகாய் வியாபாரியோ, ஊறுகாய் வியாபாரியோ கிடைக்காமலா போய் விடுவர்!” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
There are no comments yet
Or use one of these social networks