சென்னை: தமிழகத்தில் ஆளும்கட்சியான அதிமுகவைத்தவிர ஒட்டுமொத்த அரசியல் கட்சிகள், பொதுமக்கள் என்று அனைத்துத் தரப்பினரும் ஓரணியில் திரண்டு நின்ற விவகாரம் தமிழக அரசியல் வரலாற்றில் ‘டாஸ்மாக்’ விவகாரமாகத்தான் இருக்கும். இந்நிலையில் அதிமுக அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என தேர்தல் நேரத்தில் முதல்வர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார். அதன்படி ஆட்சியை தக்கவைத்து மீண்டும் முதல்வராக பதவியேற்ற அன்றே 500 டாஸ்மாக் கடைகளை மூடுவது, டாஸ்மாக் கடைகளின் வேலை நேரத்தை 2 மணிநேரம் குறைப்பது குறித்த ஆவணத்தில் கையெழுத்திட்டார் ஜெயலலிதா.jayalalitha-21

தமிழகம் முழுக்க உள்ள 6826 டாஸ்மாக் கடைகள் மூலம், ஒரு நாளுக்கு ரூ.70 முதல் ரூ.80 கோடி வரை அரசுக்கு வருமானம் கிடைக்கிறது. டாஸ்மாக் மதுக்கடைகளை காலை 10 மணிக்கு திறப்பதற்கு பதிலாக 12 மணிக்கு திறப்பதாலும், 500 கடைகளை மூடுவதாலும், அரசுக்கு ஏற்படும் இழப்புகளை சரிகட்ட புதிய முயற்சியை டாஸ்மாக் நிறுவனம் எடுத்துள்ளதாம். அதன்படி டாஸ்மாக் சரக்குகளை ஆன்லைனில் விற்பனை செய்ய முதல்வர் ஜெயலலலிதா முடிவு செய்துள்ளதாக நம்பத்தகாதபோயஸ்கார்டன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான உத்திரவையும், ஸ்மார்ட் போன் ஆப் எனப்படும் செயலியையும் முதல்வர் சட்டப்பேரவை கூட்டத்தில் அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் குடிமகன் மற்றும் குடிமகள்கள் தங்கள் வீட்டிலிருந்த படியே, சுட்டுவிரலில் சரக்குகளை ஆர்டர் செய்யலாம்.tasmac

சுமார் 1,000 வகை டாஸ்மாக் சரக்குகள்களை விற்பனை செய்ய ஃபிலிப் கார்ட், ஸ்னப்டீல், ஜபாங், இந்தியா டைம்ஸ் மற்றும் அமேசான் நிறுவங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டு கமிசனும் இறுதிப் படுத்தப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் மூலம் 130 மில்லியன் இணையதள வாடிக்கையாளர்களைக் கொண்ட இந்தியாவின் இணையதள வர்த்தகம் மூலம் டாஸ்மாக் மேலும் பல கோடி வருமானம் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய திட்டத்தின் மூலம், டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டோம் என்று எதிர்கட்சிகளின் வாயை மூடவும், கடைகளை மூடுவதன் மூலம் ஏற்படும்  வருமான இழப்பையும் சரி செய்து ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.

There are no comments yet