சென்னை: ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ள பிரபல நடிகர் ரஜினிகாந்தின் “கபாலி’ திரைப்படம் உலகமெங்கும் திரை அரங்குகளில் வரும் வெள்ளியன்று (ஜுலை 22) வெளியாகிறது. கபாலி படத்தை சுற்றி எழுந்துள்ள எதிர்பார்பை வியாபாரத்திற்கு பயன்படுத்திக்கொள்ளும் வகையில்,பல்வேறு வியாபாரிகள் தங்களால் முடிந்த வரை ரஜினிக்கும், கபாலி படத்திற்கும் தங்களால் முடிந்த வியாபார யுக்திகளை பயன்படுத்தி மக்களை முட்டாளாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் கபாலி படம் வெளியாகும் வரும் 22ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தமிழக கல்வித்துறை பரிசீலித்து வருகிறது. அத்துடன் கல்லூரிகளுக்கு எப்படியும் மாணவர்கள் வரமாட்டார்கள் என்பதால் தனியாக விடுமுறை அறிவிக்கத் தேவையில்லை என மேற்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. சாலையில் மக்கள் நடமாட்டமே இருக்காது என்பதால் கடைகளை அடைப்பதற்கு பதிலாக ஒட்டுமொத்தமாக விடுமுறை அறிவித்து விடலாம் என தமிழக வியாபாரிகள் சங்கம் முடிவு செய்துள்ளதை தொடர்ந்து, தங்கள் வழக்கமாக அறிவிக்கும் பந்த் வேலை நிறுத்தத்தை 22ஆம் தேதிக்கு மாற்ற கம்யூனிஸ்ட் கட்சிகளும் முடிவு செய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
இது மட்டுமன்றி கபாலி வெளியாகும் நகரங்களுக்கு இலவச ரயில் சேவையும், படம் முடிந்து டிக்கெட்டை காண்பித்தால் ஓலா, ஊபர் போன்ற நிறுவனங்கள் இலவச டாக்ஸி சேவையையும் அளிக்க இருப்பதாக தெரிகிறது. பால், எரிவாயு, போக்குவரத்து, மருத்துவமனைகள், தடியடி நடத்தும் காவல்துறை போன்ற அத்தியாவசிய சேவைகள் மட்டும் 22ஆம் தேதி தடையின்றித் தொடரும் என தமிழக அரசு அறிவிக்கும் என விவரமறியாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கபாலி ரிலீஸை ஒட்டி தான் செல்லவிருந்த காங்கோ, ஆப்பிரிக்கா, அண்டார்டிகா சுற்றுப்பயணங்களை ஒத்தி வைத்துவிட்டு கபாலி முதல் காட்சியை முதல் டிக்கெட் எடுத்து பார்ப்பதற்காக பிரதமர் மோடி இன்று முதல் டிக்கெட் கவுண்டரில் காத்து இருப்பதாக டெல்லியில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் ரஜினியின் நன்மதிப்பை பெற்று ரஜினியை அடுத்த தேர்தலுக்குள் பாஜகவில் சேர்த்து விடலாம் என மோடி திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.
இத்தனையையும் மீறி கபாலி படம் வெற்றி பெற்றால் இந்திய திரை உலக வரலாறில் இது ஒரு மிகப் பெரிய அதிசயமாக இருக்கும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
There are no comments yet
Or use one of these social networks