சென்னை: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி திருத்த மசோதா, லோக்சபாவில் வெற்றிகரமாக நிறைவேறியது. ‘ஜி.எஸ்.டி., மசோதா விவகாரத்தில் தமிழகத்தின் கோரிக்கை ஏற்கபடவில்லை’ எனக்கூறி, அ.தி.மு.க., உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து, மசோதாவில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் ஒவ்வொன்றுக்கும் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இறுதியில், மசோதா நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது. சபையில் இருந்த, 443 உறுப்பினர்களும் மசோதாவுக்கு ஆதரவாக ஓட்டளித்தனர்.
இந்நிலையில் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.க., – எம்.பி.,க்கள் வெளிநடப்பு செய்தது குறித்து புதுத்தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து போயஸ் கார்டன் வட்டாரங்கள் தெரிவித்ததாவது: எங்களுக்கு இந்த ‘சரக்கு வரி’ டாஸ்மாக் சரக்கை எதிர்த்து கொண்டுவரப்பட்டது என்று இப்போதுதான் தெரியவந்தது. எனவே தமிழகத்தின் வாழ்வாதாரமான டாஸ்மாக்கை குறிவைத்து கொண்டுவரப்பட்ட இந்த ‘சரக்கு வரி’யை எதிர்க்க வேண்டும் என்ற அனைத்து குடிமகன்களின் விருப்பத்தை நிறைவேற்றவே அ.தி.மு.க., உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி ‘சரக்கு’ வரியை எதிர்த்து வாக்களித்ததன் மூலம் குடிமகன்களின் வயிற்றில் ‘பீரை’ வார்த்த கோமகளே என்று முதல்வர் ஜெயலலிதாவிற்கு விழா எடுக்கப் போவதாக அறிவித்துள்ளது.
There are no comments yet
Or use one of these social networks