டெல்லி: நாட்டின் 70-ம் ஆண்டு சுதந்திர தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின உரையாற்றினார். பிரதமர் மோடி சுதந்திர தின விழா உரையாற்றிக் கொண்டிருந்தபோது மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, மனோகர் பாரிக்கர், அனந்தகுமார், நிர்மலா சீத்தாராமன் மற்றும் டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் தூங்கி வழியும் படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இவ்விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள டெல்லி துணை முதல் மந்திரி மணிஷ் சிசோடியா, ’தூங்கும் அளவுக்கு பிரதமரின் பேச்சு ”போர்” அடித்திருக்கக்கூடும்” என்று சப்பை கட்டு கட்டினார்.
இது குறித்து கேஜ்ரிவால் இடம் நமது கப்சா நிருபர் கேட்டதற்கு, “நான் தூங்கவில்லை, செங்கோட்டையில் நான் கொடியேற்றி, சுதந்திர தின உரை ஆற்றினால் எப்படி இருக்கும் என்று கண்ணை மூடி கற்பனை செய்து கொண்டு இருந்தேன்” என்று சமாளித்தார்.
தலித் தாக்குதல், விவசாயிகள் தற்கொலை, பாக் பயங்கரவாத தடுப்பு முயற்சிகள், பசு பாதுகாவலர்கள் குறித்து எதுவும் பேசாமல் வந்திருப்பவர்களை தூங்க வைக்கும் ஒரே நோக்கத்தில் உரை ஆற்றிய மோடி இன்று நமது நிருபரின் தூக்கத்தில் அளித்த பிரத்யேக பேட்டி: எனக்கு வெகு நாட்களாக கல்லூரி, பல்கலை கழகங்களில் பேராசிரியராக விருப்பம். டீக்கடையில் இருந்தவன் எப்படி டீச்சராக முடியும் என்று அனைவரும் என்னை கேலி பேசினர். சமீபத்தில் டெல்லி பல்கலை துணை வேந்தரிடம் என் விருப்பத்தை தெரிவித்தேன். அவர் நீங்கள் பேசும் அரசியல் கூட்டங்களில் அனல் பறக்கிறது. இப்படி பேசினால் மாணவர்கள் வகுப்புக்கே வரமாட்டார்கள். விரிவுரையாளராக இருக்க ஒரே தகுதி மாணவர்களை எப்படியாவது வகுப்புக்கு வைப்பதுதான். ஒவ்வொரு நாளும் நள்ளிரவு வரை கண்விழித்து பேஸ் புக் பார்த்து விட்டு அடுத்த நாள் கல்லூரிக்கு வந்து கொஞ்சம் தூங்கலாம் என்று வரும் மாணவர்களை நீங்கள் கொஞ்சம் தூங்க வைக்க முடிந்தால் உங்கள் வகுப்புக்கு மாணவர் கூட்டம் அலை மோதும் என்றார். இன்றைய சுதந்திர தினப் பேச்சில் அதை சோதனை செய்து பார்த்தேன். சொல்லப் போனால் என்னுடைய ‘டெமோ கிளாஸ்’ வெற்றி பெற்று விட்டது .
மேலும் “முந்தைய அரசுகளை சுற்றி சந்தேகங்கள் இருந்தன. ஆனால், தற்போதைய அரசைப் பற்றி மக்களின் கனவுகள் இருக்கின்றன, நீங்களே பார்த்தீர்கள் என் பேச்சின் மூலம் எத்தனை பேர் கனவு கண்டுகொண்டு இருக்கிறார்கள். சாமான்யனின் கனவுகளுக்கும் தேவைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் அரசு இது அதனால் தான் ‘தாலாட்டு’ பாணியில் என் உரையை வடிவமைத்து வழங்கினேன். டெல்லி பல்கலை துணை வேந்தர் என் பேச்சுக்கு பாரட்டு தெரிவித்து உடனடியாக பகுதி நேர விரிவுரையாளர் பணியில் சேர்ந்து மாணவர்களுக்கு தாலாட்டு பாட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதை ஏற்று விரைவில் விரிவுரையாளர் பணியில் சேர உள்ளேன். எனது புதிய பணி மூலம் எதிர்கால சமுதாயமான மாணவர்களை முளையிலேயே மழுங்கடித்து இந்துத்துவா கருத்துக்களை தாலாட்டாக போதித்து, சிந்திக்கவிடாமல் செய்வது எளிதாகும் என்று கூறி அடுத்த சுற்றுப் பிரயாணத்திற்கு விமானத்தை பிடிக்க விரைந்தார்.
There are no comments yet
Or use one of these social networks