சென்னை: 125 கோடி மக்களை கொண்ட இந்தியா, ரியோவில் நடந்து வரும் 2016ம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டியில் இதுவரை ஒரே ஒரு வெண்கலம் மட்டுமே வென்றுள்ளது. இன்னும் ஒரு தங்கம் கூட வாங்காமல் திணறிவருகிறது. இதற்கு முழுக்க முழுக்க காரணம் தமிழன் என்றால் பாரபட்சம் காட்டும் இந்திய ஒலிம்பிக் சங்கமே என இளையதளபதி விஜய் ரசிகர்கள் கடும் கண்டனத்தைத் தெரிவித்து உள்ளனர். இது குறித்து இளையதளபதி விஜய் ரசிகர் மன்றத்தலைவர் எஸ்.ஏ. சந்திரசேகர் இன்று பிரதமர் மோடியை சந்தித்து, தனது மகனை ஒலிம்பிக்குக்கு அனுப்பி இருந்தால் இந்நேரம் பல தங்கப் பதக்கங்களை வாங்கி இருக்கலாம். குறைந்த பட்சம் இந்தியாவின் மானத்தையாவது காப்பாற்றி இருக்கலாம் இன்று தனது வருத்தத்தை தெரிவித்தார்.

பிரதமரை சந்தித்து விட்டு சென்னை வந்த போது, விமானநிலையத்தில் எஸ்.ஏ. சந்திரசேகர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியாவில் பங்குபெற அனைத்து தகுதிகளையும் என் மகன் விஜய் பெற்றுள்ளார். உங்களுக்கே தெரியும் அவர் குருவி படத்தில் லாங் ஜம்பில் உலக சாதனை படைத்துள்ளார். அழகிய தமிழ்மகனில் ஓட்டப்பந்தயத்தில் பி.டி உஷாவை விட வேகமாக ஓடி சாதித்துள்ளார். கில்லி படத்தில் கபடியில் அவர் துள்ளித் துள்ளி விளையாடியதை யாராலும் மறக்க முடியுமா, அவர் அந்தப் படத்தில் அரையிறுதியில் தோற்றும், இறுதியில் வென்றுள்ளார். பத்ரி படத்தில் பாக்ஸிங் சாம்பியனாக பதக்கம் வென்றுள்ளார். போக்கிரி படத்தில் துப்பாக்கி சுடுதலில் வென்றுள்ளார். புலி படத்தில் கருஞ்சிறுத்தையுடன் மல்யுத்தத்தில் வென்றுள்ளார். இதற்கெல்லாம் சிகரமாக சுறா படத்தில் நீச்சல் அடித்து அசத்தியுள்ளார்.sura

இத்தனை திறமை உடைய இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் இளைய தலைவலி விஜய்யை ஒலிம்பிக்கில் பங்கேற்க விடாமல் செய்ததில் அரசியல் சதி உள்ளதாக நானும், அவரது ரசிகர்களும் நினைக்கிறோம். விஜய் பங்கேற்று இருந்தால் பெல்ப்ஸின் 6 தங்கப் பதங்கங்களையும் இந்தியாவே வாங்கியிருக்கலாம் என என் தலைமையில் அவரது ரசிகர்கள் சாட்சிகளுடன் தங்களது தரப்பு நியாயத்தை கேட்டு போராட்டம் நடத்த உள்ளனர். இதற்கு ஆதரவு கேட்டு சட்டசபையில் சஸ்பெண்ட் ஆகி வீட்டில் சும்மா இருக்கும் மு.க.ஸ்டாலினை சந்திக்க உள்ளேன். முத்தமிழ் வித்தகர் கலைஞர் என் மகனின் குத்தாட்டங்களின் ரசிகர், அவரும் எனது போராட்டத்திற்கு ஆதரவு தருவார் என் நம்புகிறேன் என்று தெரிவித்தார்.

பகிர்

There are no comments yet