பிரேசில்/ புது டெல்லி: நடந்து முடிந்த ரியோ ஒலிம்பிக் பெண்களுக்கான மாரத்தானில் இந்திய வீராங்கனை ஓ.பி. ஜெய்ஷா எல்லைக் கோட்டை கடந்ததும் நிலை குலைந்து மயங்கி விழுந்தார். பதறிப்போன பயிற்சியாளர் அவரை அவசரமாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். இந்திய அதிகாரிகள் தரப்பில் வீரர்களுக்கு தண்ணீரோ, குளிர்பானங்களோ எதுவும் வைக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு மோடி அரசு ஆளாகி இருக்கிறது.
இது குறித்து இன்று தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தில் விளையாட்டு அமைச்சர் தீராத விளையாட்டுப் பிள்ளை இப்பிரச்சினையை எழுப்ப, அவை முன்னவர் ஓ பன்னீர்செல்வம் கூறியதாவது: ” ஒவ்வொரு 8 கிலோ மீட்டருக்கு தான் ரியோ ஒலிம்பிக் கமிட்டியினர் வழங்கும் குடிநீர் கிடைக்கும். அது போதுமானது அல்ல. அம்மா குடிநீர் ரியோவில் வைக்க அனுமதித்து இருந்தால் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ஒரு ஸ்டாலில் அம்மா குடிநீர் பாட்டில்களை வைத்திருப்போம். அம்மா குடிநீர் இருந்திருந்தால் மாரத்தான் வீராங்கனை ஜெய்ஷாவுக்கு இந்த நிலைமை வந்திருக்காது அம்மா குடிநீர் அருந்தி புத்துணர்ச்சியுடன் ஓடியிருந்தால் தனது 101 சதவீத திறமையை வெளிப்படுத்தியிருப்பார் அதுவே “டாஸ்மாக்” தண்ணீராக இருந்தால் கேட்கவே வேண்டியது இல்லை. எம்ஜி.ஆர் சமாதியில் உள்ள இரட்டை சிறகு குதிரைபோல் பறந்திருப்பார். அம்மா உணவகம் அமைக்க ரியோவில் அனுமதி தந்து இருந்தால் நாங்களும் ஆங்காங்கே அம்மா ஸ்டால்கள் அமைத்து 3 கோடியே 18 லட்சம் இட்லிகள் வரை விற்று சாதனை புரிந்த அம்மா உணவகத்தில் இருந்த ஊசிப்போன வடையை நைசாக சாப்பிட வைத்தே மற்ற நாட்டு வீரர்களை திணற அடித்திருப்போம், சென்னை வெள்ளத்தில் வேகமாக ஸ்டிக்கர்கள் ஒட்டிய நமது தொண்டர்களுக்கு, சில நூறு வீரர்களின் உணவு பொட்டலங்களில் அம்மா ஸ்டிக்கர் ஒட்டுவது ஒன்றும் பிரமாதமான காரியம் அல்ல. மேலும் அடுத்த ஒலிம்பிற்காக அம்மா குடிநீர் கான்ட்ராக்ட்டும், அம்மா உணவக கான்ட்ராக்ட்டும் எடுப்பதற்காக, ஐந்து அமைச்சர்கள் தலைமையில் ஒரு குழு அமெரிக்க, ஐரோப்பா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்ல இருக்கிறது என்று பதில் அளித்தார்.
இது குறித்து பிரதமர் மோடி இன்று அளிக்காத பேட்டியில் கூறி இருப்பதாவது: ஒலிம்பிக் செலவு 100 கோடி ரூபாய் ஆனா “குடிக்க தண்ணி தரலையே”ன்னு கேக்கறது என்ன நியாயம்னு தெரியவில்லை. வீரர்கள் அங்கு விளையாடத்தான் சென்றனர், தண்ணீர் குடிக்க அல்ல. அப்படி தாகம் எடுத்தாலும் அவர்கள் பசுவின் கோமியம்தான் குடிக்க வேண்டும். எனது இந்திய ஒலிம்பிக் அதிகாரிகள் ரியோவிற்கு ஒரு சுற்றுலா தான் சென்றனர். இந்திய விளையாட்டு வீரர்களுக்கு தேவையானதை கவனிக்க அல்ல. என்னைப்போல் செல்ஃபி எடுப்பதிலும் அங்குள்ள இடங்களை சுற்றி பார்ப்பதிலும்தான் அதிக நேரங்களை செலவிட்டனர். பசு பாதுகாப்பு, தலித், முஸ்லீம் கொலவெறி, என்று தேசிய விளையாட்டுகளில் களைப்படைந்த எனக்கு இதைப்பற்றி எல்லாம் சிந்தித்துப் பார்க்க நேரம் இல்லை. ரியோவில் என்ன நடந்தது என்று எனக்கும் கடவுளுக்கும் தான் தெரியும் என்று ஜெய்ஷா கூறியுள்ளார், ஆனால் அவர் எந்தக் கடவுள் என்று சொல்லவில்லை, அவர் இந்துக் கடவுள்களைத்தான் சொல்லியிருப்பார் என நம்புகிறேன் என்று கூறிய படி புதிய “சூட்” தைக்க ஒட்டுத் துணி டைலர் எண்ணை தனது செல்போனில் டயல் செய்தபடி கிளம்பினார்.
There are no comments yet
Or use one of these social networks