சென்னை/திருவனந்தபுரம்: சமீபத்தில் ஃபிரான்ஸ் நாட்டு அரசின் ‘செவாலியே’ விருதுக்கு கமல்ஹாசன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பதை நாம் செய்திகளில் படித்தோம். இதற்காக ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் கமலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஆனால் தமிழக அரசு சார்பாக எந்தவித வாழ்த்தும் வரவில்லை.
இந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் கமலை வாழ்த்தி கடிதம் அனுப்பியுள்ளார். அதில் ‘‘உங்களுக்குத் தகுதியான விருது செவாலியர். இந்திய சினிமாவை உலகத் தரத்துக்குக் கொண்டு போனதற்குச் சாட்சியாக உங்களைத் தவிர சரியான ஆள் வேறு ஒருவரில்லை என்று தெரிகிறது’’ என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதிலளித்து கமல் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது : ‘‘உங்களின் அன்பான வார்த்தைகளுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றி! ‘வேற்று மாநில முதல்வர், தமிழக நடிகரை பாராட்டுவது எவ்வளவு அழகு’ என்பதாகச் சிலர் சொல்கிறார்கள் என்று கேள்விப்படுகிறேன். இதில் எனக்கு மாற்றுக் கருத்து உள்ளது என்பதை சொல்லிக் கொள்கிறேன். திரு.பினராயி விஜயன், வேற்று மாநில முதல்வர் அல்ல; அவர் என் மாநிலத்தைச் சேர்ந்த முதல்வர். நீங்கள் மலையாள சினிமா பார்க்கும் எந்த ஒரு மலையாளியையும் கேட்டுப் பாருங்கள் – கமல் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவன் என்று தெரியும்’’ என்று எழுதியுள்ளார்.michael-madana-kamarajan

இது குறித்து மேலும் விபரமறிய நமது கப்ஸா நிருபர் கால் ஒடிந்து கட்டிலில் படுத்திருந்த கமல் ஹாசனை எடுத்த பேட்டியின் போது அவர் கூறியதாவது: நான் ஒரு பச்சைத் தமிழன், நான் கேரளா தமிழ் நாட்டில் இருந்த போது கேரளாவில் பிறந்தேன் அப்போது  என் உடம்பெல்லாம் தமிழன் என்று பச்சை குத்தி விட்டார்கள், அதன் பிறகு அனைவரும் என்னை பச்சை தமிழன் என்றுதான் அழைப்பார்கள். நான் மைக்கேல் மதன காம ராஜன் படத்தில் காமேஷ்வரனாக நடித்த நடிப்பை பாராட்டி அன்றைய கேரளா முதல்வர் ஈ.கே.நாயனார் எனக்கு ‘மலையாள மாமண்டு’ என்ற பட்டம் கொடுத்தார். அன்றே “எண்ட சீப் மினிஸ்டர் நாயனார், எண்ட பீடி மலபார் பீடி” என்று அவரிடம் மலையாளத்தில் உறுதிமொழி அளித்து விட்டேன். விஸ்வரூபம் பட பிரச்சினைக்குப் பிறகு ஆப்கானிஸ்தானுக்கு சென்று குடியேற இருந்தேன், இப்போது மனதை மாற்றிக் கொண்டேன். கதாநாயகன் படத்தில் வரும் கஜா மூலமாக கொச்சி சென்று அங்கு செட்டில் ஆகலாம் என்று முடிவு செய்துள்ளேன் என்று கூறினார்.

There are no comments yet