சென்னை: எந்த ஒரு இயக்குனருக்கும் கிடைக்காத இரண்டாவது முறையாக ரஜினியை இயக்கும் வாய்ப்பு பா. ரஞ்சித்துக்கு கிடைத்திருக்கிறது. தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் எந்திரன் 2.0க்கு பின் தனது வுண்டர்பார் தயாரிக்கும் படத்தில் ரஜினி நடிக்க ரஞ்சித் இயக்குவாரென அறிவித்தார். இப்படம் கபாலி படத்தில் இரண்டாம் பாகமா அல்லது முற்றிலும் புதிய கதையா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது குறித்து ரஜினி நமது கப்ஸா நிருபருக்கு அளித்த மவுன பேட்டி: ரஞ்சித் என்கிற சின்ன டைரக்டர் ஷங்கர் போன்ற பிரமாண்ட டைரக்டர்களை மிஞ்சும் வகையில் பல்லயிரம் கோடிகள் குவித்த ‘கபாலி’ யை உருவாக்கி காட்டி விட்டார். ஆனால் தயாரிப்பாளர் தாணு ரஞ்சித்துக்கு ‘ரஜினியுடன் பணிபுரிய வாய்ப்பு’ என்ற பஞ்சு மிட்டாயை காட்டி சொற்ப சம்பளத்தை மட்டுக் கொடுத்துவிட்டு பிளைட் விளம்பரம், சிட்டி பேங்க் கார்ட் போன்ற வகையில் வசூலான மொத்த பணத்தையும் ஆட்டையை போட்டுவிட்டார். கணக்கு கேட்டேன் போக்கு காட்டுகிறார். எந்திரன் படத்திலும் எனக்கு சம்பளம் மட்டும் தான் கிடைக்கும், இதர லாபம் பெரிய டைரக்டரான ஷங்கருக்கு தான் போகும். எனவே எனது மருமகன் தனுஷ் ஐடியாபடி ரஞ்சித்தை எங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளோம். இந்த முறை மலேசியாவெல்லாம் போகப் போவது இல்லை ‘காக்கா முட்டை’ படம் எடுத்த ரயில்வே ட்ராக், கூவத்து ஓரம் படத்தை முடித்து விட திட்டம் வைத்துள்ளோம்” என்று சீக்ரெட்டை வெளிப்படுத்தினார்.
அதுவரை அருகில் கையை கட்டிக் கொண்டு நின்றிருந்த தனுஷ் தன் பங்குக்கு பேசினார்: நானும் மாமாவும் அடுத்தவங்க காசில் தான் பிரம்மண்ட படம் எடுத்து பழக்கம். சொந்த காசில் சூனியம் வைத்துக் கொள்ள மாட்டோம். எனக்கு படிப்பு ஏறல, பத்தாங்கிளாஸ் படிக்கும் போது ‘யூத் படம்’ என்ற போர்வையில் துள்ளுவதோ இளமை என்ற ‘பிட்டு’ படம் எடுத்து என்னை என் அப்பா சினிமாவுக்கு அறிமுகம் செய்தார். நான் செய்த புண்ணியத்தாலும் கடவுள் காட்டிய கருணையாலும் சூப்பர் ஸ்டாரின் மருகனானேன். ரசிகர்கள் கூற்றுப் படி, ‘ரஜினி பொண்ணை கல்யாணம் பண்ணி, (3 படத்தில்) கமல் பெண்ணை கட்டிப்பிடித்து நடித்தவன் நான். சினிமாவில் சம்பாதிக்கிற தனுஷ் சினிமாவுக்கு என்ன செய்தான் என்ற கேள்வி வந்துவிடக்கூடாது என்பதற்காகவே தயாரிப்பு நிறுவனம் துவங்கினேன். தங்களது ஆரம்ப காலங்களில் குறைந்த சம்பளத்திற்கு வேலைக்கு வரும் ரஞ்சித் போன்ற டெக்னீஷியங்களை வைத்து குறைந்த முதலீட்டில் படம் எடுத்து அவார்டுகளையும், பணத்தையும் சம்பாதிக்கும் உயர்ந்த நோக்கத்துடனும், ரசிகனின் பணத்தை உருவி, நெட்டில் உலா வரும் உலக சினிமா பித்தர்களின் கனவு நாயகனாக போலி வேஷமிட்டு ‘படிக்காத சினிமா மேதை’ என்ற பட்டத்தை பெறும் உயர்ந்த்த நோக்கமே என் தாரக மந்திரம்” என்று முடித்தார்.
இயக்குனர் ரஞ்சித் கூறும்போது: நான் கபாலி படத்தின் படப்பிடிப்பின் போது ஒரு வரி கதையினை ரஜினியுடன் பகிர்ந்தேன், அப்படம் கபாலியிலிருந்து வேறுப்பட்ட ஒரு களத்துடன் இருக்கும். திரைக்கதையை இப்போதுள்ள காவிரி பிரச்சினையுடன் சேர்த்து மாற்ற இருக்கிறேன். உங்கள் நியூஸ் வாச்கர்களுக்காக அந்தக் கதையை சொல்கிறேன்.
கர்நாடகாவில் டவுன் பஸ் கண்டக்டராக இருக்கிறான் பச்சைத் தமிழன் சிவாஜி ராவ் கெய்க்வாட். ஒரு நாள் கெம்பே கவுடா சர்க்கிளில் இருக்கும் ஒரு உணவகத்துக்கு சாப்பிடப் போகிறான்… அங்கே குடிக்கத் தண்ணீர் கேட்க, இல்லை என்று சொல்லி விடுகிறார்கள். ஏன் என்று ஆராயப் புறப்படுகிறான் ஹீரோ. அப்போது தான் தெரிகிறது. தமிழகத்தைச் சேர்ந்த சில அரசியல்வாதிகளும், கர்நாடகத்தை சேர்ந்த சில அரசியல்வாதிகளும் காவிரிக்குக் குறுக்கே நிறைய டேம்களைக் கட்டி, தங்களது ஆயிரக்கணக்கான ஏக்கர்களுக்கு மட்டுமே தண்ணீர் எடுப்பது. அத்தனை டேம்களையும் உடைத்து தமிழக மக்கள் வாயில் பஞ்சாமிர்தம் ஊற்ற முடிவு செய்கிறான் கபாலி.
தமிழக மக்களின் விடிவெள்ளியான குருமா என்ற ராணுவத் தலைவரின் உதவி கிடைக்கிறது. சுமார் 500 எலிகாப்டர், 10,000 மிசின் கன்கள், பயங்கர குண்டுகள் சகிதம் அணைகளை உடைத்து, காவிரியை மீட்கிறான். எங்களைத் தவிர யாரும் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட தொடக்கூடாது என ராணுவத் தலைவர் உத்தரவிட்டு விடுகிறார். என் ஒரு சொட்டு வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக் காசு கொடுத்தது தமிழ் அல்லவா என்ற ரீ மிக்ஸ் பாடலும் உண்டு. ஹீரோயினாக ரஜினியுடன் ஏற்கனவே குழந்தை நட்சத்திரமாக, ஜோடியாக நடித்த மீனாவின் ஆறு வயது மகள் குட்டி மீனாவை போடலாம் என ரஜினி சார் சொல்லியிருக்கிறார் என்றார்.
கதையைக் கேட்டு மயக்கமடைந்த நமது நிருபர் இப்போது கீழ்பாக்கம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாக நம்பத்தகாத செய்திகள் தெரிவிக்கின்றன.
There are no comments yet
Or use one of these social networks