சென்னை: ஜெயலலிதா காய்ச்சல் காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சென்ற மாதம் அனுமதிக்கப்பட்டார். அப்போதில் இருந்தே அ.தி.மு.க. பிரமுகர்களும், தொண்டர்களும் அப்பகுதியில் பூஜை புனஸ்கார வேலைகளில் ஈடு பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. இதை வேடிக்கை பார்க்க வருபவர்களை கட்டுப்படுத்தவும், நலம் விசாரிக்க வருபவர்களை திருப்பி அனுப்பவும் அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. அமைதி காக்க வேண்டிய ஆஸ்பத்திரி வளாகம் முன்பாக தொடர்ந்து கோஷம் ழுப்பியவாறும், தங்களுடைய இஷ்ட தெய்வங்களை சத்தம் போட்டு வேண்டிக்கொண்டும், சில தொண்டர்கள் கையில் சூடம் ஏற்றியும், தேங்காய் உடைத்தும், பூசணிக்காய் உடைத்தும், குங்குமம் தூவியும் ஜெயலலிதா பூரண குணமடையவேண்டும் என்று ரோட்டில் அமர்ந்து பிரார்த்தனை செய்த வண்ணம் உள்ளனர். ஒரு சில தொண்டர்கள் ஆஸ்பத்திரி முன்பாக விழுந்தும் வணங்கினர். தொண்டர் ஒருவர் ‘அம்மா பரிபூரண நலன் பெற்றுவிடுவார். 100 ஆண்டுகள் நல்லாட்சி தருவார்’ என்ற வாசகம் கொண்ட பதாகையை பிடித்தபடி ஆஸ்பத்திரி அருகே உட்கார்ந்திருந்தார். சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஜெயலலிதாவுக்காக தொண்டர்கள் வேண்டிக்கொண்டே இருக்கின்றனர். ஜெயலலிதா நலம் பெற வேண்டும் என்று திருநங்கைகள் பூசணிக் காய்களை உடைத்து வேண்டினர். இதனால் கிரீம்ஸ் ரோட்டில் எங்கு பார்த்தாலும் குப்பை கூளமாகவும் பூசணிக்காய் சிதறல்களாகவும் காட்சி அளிக்கிறது.

இதற்கிடையே அக்.11 அன்று ஆயுத பூஜை திருநாள் அன்று சாம்பார் வைக்க பூசணி வாங்க கோயம்படு மார்க்கெட் சென்ற நமது கப்சா நிருபரிடம் காய்கறி மொத்த வியாபாரி காத்துவாயன் அளித்த பேட்டி:”போன மாசத்திலேர்ந்தே பூசணி தட்டுப்பாடு ஆரம்பிச்சிடுச்சு சாமி, போறவன் அம்மாவை பார்க்க போறானோ இல்லையோ கட்டை பையில பூசணிக்காயோட தான் போறான்.உடைச்சு தெருவை குப்பையாக்கிட்டு போயிடறான். நேத்து போயி பார்த்தேன். கோயம்பேடு, கொத்தவால் சாவடிய மிஞ்சிற மாதிரி ஒரே பூசணி குப்பை, தேங்காய் சிரட்டை, இந்த மாசம் வேற மூணு நாலு பண்டிகைங்க வருது, தீபாவளியும் சேர்த்து, இந்த நேரம் பார்த்து அம்மா அப்பல்லோவில் போய் படுத்ததால எங்க வியாபாரமும் படுத்துப் போச்சு.. ஆயுத பூஜைக்கு பூசணி உடைச்சு சாமி கும்பிட கடை ஓனருங்க என்ன விலை சொன்னாலும் கொடுத்துட்டு வாங்கிட்டு போவாங்க, அவங்களுக்கு கொடுக்க கூட பூசணி கிடைக்கல. வெளி ஊர்கள்ல் இருந்து வர்ற பூசணி லாரி மொத்ததையும் கோயம்பேட்டுக்கு விடாம கிரீம்ஸ் ரோட்டுக்கு திருப்பி விட்டுடானுவ.ayudapoojai-poosani

தாகத்துக்கு வெட்டி திங்கிற தர்ப்பூசணி மேல அடுத்த கண்ணு போகுது சார். அம்மா வெளியே வரலேன்னா தர்ப்பூசணி உடைச்சு பூஜை பண்ணவும் தயங்க மாட்டானுங்க இந்த அம்மா வெறியனுங்க. இப்படியே போச்சுன்னா பூசணிக்காய் சாம்பார்னு ஒரு ஐட்டம் தமிழ்நாட்டு உணவு லிஸ்ட்ல இருந்தே காணாம பூடும் சாமி. ஆயுத பூஜையும் அனாமத்து பண்டிகையா பூடும். சீக்கிரத்துல தேங்காய் தட்டுப்பாடும் வந்திடும், கோவில்ல பக்தருங்களுக்கு கிள்ளி கொடுக்க கூட குங்குமம், விபூதி, சூடம் கிடைக்காது. அதுக்காகவாவது அம்மா சீக்கிரமா குணமடைஞ்சு அப்பல்லோவை விட்டு வெளியே வரணும் சாமி” என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்

There are no comments yet