சென்னை: முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22ம் தேதி முதல், சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறார். ஜெயலலிதா உடல் நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு முதல்வர் தொடர்ந்து மருத்துவ நிபுணர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறார். தேவைப்படும், செயற்கை சுவாச உதவி, ஆன்டிபயோடிக்ஸ், ஊட்டச்சத்து சப்ளை, உதவிகரமான தெரபி மற்றும் பிசியோதெரபி சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன என்று கூறி வருகிறது.

இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து மூன்று வாரங்களாக மருத்துவமனையில் இருப்பதால் அரசு நிர்வாகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் துணை முதல்வர், பொறுப்பு முதல்வர்களை அறிவிக்க வேண்டும் என்றும் தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின், முதலானோர் தொடர்ந்து கூக்குரல் எழுப்பி வருகின்றனர்.

 இது தற்போதைய புகைப்படம் அல்ல, கோப்புப் படம்

இது தற்போதைய புகைப்படம் அல்ல, கோப்புப் படம்

இது குறித்து மேலும் விபரமறிய நமது கப்ஸா நிருபர் அம்மாவின் ஆணையை எதிர் பார்த்து வேலையில்லாமல் இருக்கும் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்தார். அப்போது கரம்பூர் எம்.ஏல்.ஏ மேசை தட்டி மேகநாதன் மற்றும் கொருக்குப் பேட்டை எம்.ஏல்.ஏ. கைதட்டி கல்யாணராமன் ஆகியோர் கூறியதாவது: அம்மா அப்பல்லோ போனதிலிருந்து மாமூல் வாழ்க்கையே போய்டுச்சு சார். அசெம்பிளி கூடுபோதெல்லாம் மேசையை தட்டித்தட்டி பழக்கப்பட்ட இந்த என்னுடைய கைகளுக்கு இப்போ வேலையில்லை. காவிரித்தாயே, கன்னித்தாயே என்று அவ்வவ்ப்போது போஸ்டர் அடிப்போம், அம்மாவுக்கு உடம்பு சரியில்லாததால் அதுவும் இல்லாமல் இப்போது கொஞ்சம் அடக்கி வாசிக்கிறோம்.

அம்மா விதி 110-ன் கீழ் அறிவிக்கும் திட்டங்களின் மூலம் அதிகாரிகளையும், பாமரர்களையும் ஏமாற்றி வேலை வாங்கி தருகிறேன், தண்ணீர் வாங்கி தருகிறேன் என்று கொஞ்சம் ‘மாமூல்’ கிடைக்கும். இப்போது அதுவும் தற்காலிகமாக தடைப்பட்டுள்ளது. அம்மா நல்லபடியாக உடல் நலம் தேறி வரும் வரைக்கும் எங்களது ‘மாமூல்’ வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது என்று சோகத்தோடு கூறி அம்மாவுக்காக பூசணிக்காய் பூஜை செய்ய அப்பல்லோ விரைந்தனர்.

There are no comments yet