முன்னொரு காலத்தில் பட்டணத்தான் பட்டி என்ற ஒரு சிற்றுரில், வாசந்திகா என்ற இளம் யுவதி, வெளிநாட்டு வாணிபர்களுக்கு தன் நாட்டில் வாணிபம் புரிய சேவை மையம் நடத்தும் செல்வந்தரிடம் ஒருவரிடம் பணிபுரிந்து கொண்டிருக்கிறாள். அலுவல்முறை காரியமாக நம்பகமான கணக்கர்  தேவைப்படுவதால் அந்தச் செல்வந்தர் வாசந்திகாவின் தலைமைக் கணக்கரிடம் வெளிநாட்டு ரகசிய கோப்புகளை ஒரு குடுவையில் இட்டு பாதுகாப்பாக வைக்கும்படி கொடுத்து வைக்கிறார். அந்த ராணுவரகசியமானது செல்வந்தரிடம் வேலை புரியும் ஒரு புல்லுருவியின் பணத்தாசைக்காக கொள்ளை போய்விடுகிறது, அந்த ரகசியம் வெளியானது தெரிந்து அதை நகல் எடுத்த தலைமை கணக்கர் வாசந்திகாவிடம் கொடுத்து வைக்கிறார். ரகசியம் வெளியானதை தெரிந்து கொண்ட அந்த வெளிநாட்டு நிறுவனம் செல்வந்தரிடம் முறையிட, கோபாவேசம் கொண்டு செல்வந்தர் தலைமை கணக்கரின் வாழ்வுக் கணக்கை முடித்துவிடுகிறார். ஆனால் இறக்கும் தருவாயில் யுவதி வாசந்திகாவிடம் ஒரு நகல் இருப்பதை கூறிவிட்டு உயிர் விடுகிறார்.ramkumar1

செல்வந்தர் வாசந்திகாவின் உயிருக்கு உத்தரவாதம் கொடுப்பதுபோல் நயவஞ்சகமாக பேசி ரகசிய கோப்பு அடங்கிய குடுவையை பெற்றுக்கொள்ளத் திட்டம் தீட்டுகிறார். செல்வந்தர் தனது அடியாட்களை ஏவி உளவு பார்த்து வாசந்திகாவின் கீழ்சாதி கதலனின் தொடர்பை தெரிந்து கொள்கிறார். வாசந்திகாவை கொல்ல வேண்டும், அதே சமயம் அதை சாதி ஆணவ படுகொலை போல சித்தரிக்க வேண்டும் என்பதே அந்த செல்வந்தரின் அவா. தக்க தருணம் பார்த்து காத்திருந்த அடியாட்கள் ஒரு இனிய காலைப்பொழுதில் தனது வீட்டில் இருந்து அலுவல் புரியும் இடம் வர குதிரை வண்டி நிலையத்தில் காதிருக்கும் யுவதி வாசந்திகாவை ஒரு நீண்ட கொடுவாளால் மக்கள் கூட்டத்தின் முன்னிலையில் குருதி ஆறு ஓட “சிரச்சேதம்” செய்து கொன்று விடுகிறார்கள். இந்த பட்டபகல் படுகொலை செய்தியை கேட்டு நாட்டு மக்களிடையே சலசலப்பும் பரிதாபமும் ஏற்படுகிறது. எரிகிற தீயில் எண்ணை விட்டது போல இந்த படுகொலையை செல்வந்தரின் நலம்விரும்பிகளும், நாட்டின் அரசியும் அவரது அடிப் பொடிகளும் பல்வேறாக திரித்து மக்களை குழப்போ குழப்பு என்று குழப்பி விடுகின்றனர். மக்கள் நல போராளிகள் ஓலைசுவடி நாளேடுகள் மற்றும் இன்ன பிற தகவல் முறைகளில் இந்த படுகொலையை கண்டித்தும், நீதி நிலைநாட்டப் பட வேண்டும் என்றும் வெகுண்டு எழ, கையைப் பிசையும் அரசு தலைமை வேறு விதமாத ஒரு திட்டம் தீட்டுகிறது. அதன் படி எந்த அரசியல் பின்புலமும் அல்லாத ஆடு மேய்த்துக் கொண்டு இருந்த எளிய குடும்பத்தை சேர்ந்த இளைஞன் சத்திய புத்திரனை சங்கிலியிட்டு கைது செய்து ஒரு தீவிரவாதி போல் சித்தரித்து சிறையில் அடைக்கின்றனர். கைது நாடகம் அரங்கேறும் போது அரசவை மருத்துவரை அழைத்துச் சென்று ஒரு சிறிய சவரக்கத்தியால் சத்திய புத்திரனின் கழுத்தை அறுத்தும் விடுகின்றனர். இதன் மூலம் அவன் வாயிலாக உண்மை கசியாது என்று நம்புகின்றனர்.swathi-parents3

இந்த சம்பவத்தை அறிந்த போராளி அரிச்சந்திர யுகேந்திரன் என்பவன் அந்நாட்டின் தேசிய கொடியை எறித்து மக்களிடையே ஒரு கொந்தளிப்பை உண்டாக்கி, துப்பு துலக்குகிறான். சத்திய புத்திரனை இதற்கு மேலும் உயிருடன் விட்டால் சிறைக்கு வெளியே வந்தவுடன் உண்மைகளை கசிய விட்டு விடுவான் என்று எண்ணும் அரசு தலைமையிடம், சிறைக்காவலர், சிப்பாய்களின் உதவியுடன் சத்திய புத்திரனின் வாயில் எரிபொருளை ஊற்றி தீயிட்டு விட்டு, சிறையின் சமையல் அறையில் காய்கறி நறுக்கி கொண்டு இருந்தபோது பெய்த அடை மழையில் வெட்டிய “மின்னலை” கடித்து இறந்து விட்டான் என்று “தண்டோரா” போட்டு அறிவித்து விட்டனர். நிம்மதி பெருமூச்சு விட்ட அந்த செல்வந்தர் இந்த காரியங்களில் ஈடுபட்ட அனைவருக்கும் ரகசியமாக பொன்னும் பொருளும் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அரசு தலைமையும் வெளிநாட்டு வியாபாரம் மூலம் அன்னிய செலவாணிய பெருக்கும் ஆயத்தம் கொண்டு தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனதே என்று தங்கள் அலுவல்களை தொடர்ந்து செய்து வருகின்றன. மக்களும் வாசந்திகாவை மறந்து பல நாட்களாகி விட்டது.

(இதில் இடம்பெறும் சம்பவங்கள் கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே என்று நினைக்கவும்)

There are no comments yet