சென்னை: முதல்-அமைச்சர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த மாதம் 22-ந் தேதி முதல் சிகிச்சை பெற்று வருகிறார். முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து கேட்டறிவதற்காக தினமும் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு அரசியல் தலைவர்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார். அங்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். நடிகர் ரஜினிகாந்துடன் அவரது மகள் ஐஸ்வர்யாவும் உடன் வந்திருந்தார். அப்பலோ சென்ற ரஜினி அமைச்சர்கள் மற்றும் மருத்துவர்களுடன் பேசி அம்மாவின் உடல் நலத்தை கவனித்துப் பாருங்கள் என்று அறிவுறுத்தினார்.
அப்போது அங்கே கம்பவுண்டர் வேடமிட்டு நோட்டமிட்டுக் கொண்டு இருந்த நமது கப்ஸா நிருபர் ரஜினியை மடக்கிப் பிடித்து எடுத்த பேட்டியின் பொது ரஜினி கூறியதாவது: நான் அம்மாவை பார்க்கக்கூடாது என்று தான் நினைத்திருந்தேன். ஆனா நான் எப்போ வருவேன், எப்படி வருவேன், எங்கே வருவேன்னு யாருக்குமே தெரியாது. இப்பக்கூட டிரைவர் தான் கூட்டி வந்தார். இங்க வந்த பிறகு தான் இது அப்பல்லோன்னு தெரிஞ்சுது. அதோட, என் ஆதர்ச குரு பாபாஜி கனவில் தோன்றி, “ஒரு தப்பை தண்டிச்சு பல கெட்ட காரியங்கள் நடக்க காரணமா இருக்கிறதைவிட, ஒரு தப்பை மன்னிச்சு பல நல்ல காரியங்கள் நடக்க காரணமா இருக்கலாம்” என்று அசரீரியில் சொன்னார். சில வருடங்களுக்கு முன்பு அம்மாவின் வளர்ப்பு மகன் சுதாகரனின் திருமணத்திம் போது அம்மா கெட்ட பெயரை சம்பாதித்தார். அப்போது நான் “வாய்ஸ்” கொடுத்து திமுக வெற்றி பெற வழி செய்தேன். அதன் பிறகு திமுக குடும்ப ஆட்சியில் சுதாகரன் திருமணத்தை மிஞ்சும் பல குடும்ப விழாக்களையும் சொத்து சேர்ப்பு வைபவங்களையும், நில அபகரிப்பு கொள்ளைகளை கண்டோம். திமுக ஆட்சியில் வண்ண தொலைக்காட்சிப் பெட்டி வழங்கி மக்களை ஏமாற்றப் பார்த்தார்கள். ஆனால் மக்களோ தொலைக்காட்சிப் பெட்டியை வாங்கிக் கொண்டு அதில் ஜெயா டிவி யை டியூன் செய்து திமுக வை மூக்குடைத்தார்கள். அம்மாவும் பேன் மிக்சி கிரைண்டர் என பம்பர் பரிசு தந்தார். மினி பஸ் விட்டார். காவிரியை மறந்தாலும் டாஸ்மாக் ஆறு ஓடவிட்டார்.
இந்த நற்செயல்கள் என்னை மிகவும் கவர்ந்த்ததாலும், என்னை போலவே ஒரு காலத்தில் ‘கலைப்போலி’ இந்த அம்மா என்பதாலும், என் பாபா குருஜி கனவில் சொன்னாதால், பூரண குணம்பெற வேண்டி இறைவனை வேண்டிக் கொண்டு அம்மாவை பார்க்க லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்தேன்.” என்றார். நமது நிருபர் “இவ்வளவு அம்மாவை நேசிக்கிற நீங்கள் ஏன் கடந்த சட்டமன்ற தேர்தலில் அம்மாவுக்காக வாய்ஸ் கொடுக்கவில்லை” என்று கேட்க, “தேர்தல் சமயத்துல எனக்கு தொண்டை கட்டி பேசவே முடியவில்லை, நான் சிங்கப்பூரில் ட்ரீட்மெண்ட் எடுத்தது ஊருக்கே தெரியுமே” என்று நழுவியபடி காரில் ஏறி மகள் ஐஸ்வர்யாவுடன் ‘சிட்டி ரோபோ’ பறந்தார்.
There are no comments yet
Or use one of these social networks