சென்னை: சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்த ரெமோ படம் பல்வேறு விமர்சனங்கள், கருத்துக்கள், தடைகளுக்கு இடையே நல்ல வரவேற்புடனும், வசூலுடனும் ஒடிக் கொண்டிருக்கிறது. ‘ரெமோ’ படக்குழுவினர் சார்பில் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், பேசிய சிவகார்த்திகேயன், திரைப்படம் வெளியாக பெரிதும் போராடியதாகவும், பலரும் படம் வெளிவர விடாமல் தொல்லைகள் கொடுத்ததாகவும் கண்ணீர் மல்க கூறினார். இருப்பினும் ஆஸ்திரேலியாவில் ரெமோ படம் எந்த தமிழ்ப் படத்துக்கும் இல்லாத அளவில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருப்பதால் அங்குள்ள தமிழ் அமைப்புகள் பாராட்டு விழவிற்கு ஏற்பாடு செய்துள்ளனர். அதில் கலந்து கொள்ள செல்லும் வழியில் விமான நிலையத்தில் நமது கப்ஸா நிருபரிடம் அளித்த பேட்டி:

நிருபர்: ரெமோ குழுவினர் சார்பில் நன்றி தெரிவிக்கும் விழாவில் அழுதீங்களாமே?

சிவகார்த்திகேயன்: அது ஒண்ணுமில்ல, ச்சும்மா, ரெமோ படத்துல சில எமோஷனல் காட்சிகள் வச்சிருந்தோம், எனக்கு சோக நடிப்பு வரலைன்னு டைரக்டர் திட்டினார், பிறகு படத்துல இருந்து நீக்கி விட்டார், அதுக்கு பதிலடி கொடுக்கத்தான் மேடையில் அழுது நடித்தேன்.sivakarthikeyan

நிருபர்: எங்களை வேலை செய்ய விடுங்கன்னு சிலரை குறிப்பிட்டு சொன்னீங்களே அது யாரை?

சிவகார்த்திகேயன்: அதுவா, எனக்கு சரியா நடிக்க தெரியாது, அதுனால தான் ‘வேலை’ செய்ய விடுங்கன்னு சொன்னேன். ஷூட்டிங் நடந்தப்போ வேடிக்கை பார்க்க வந்த ரசிகர்கள் கொஞ்சம் இடைஞ்சலா இருந்தாங்க அவங்களை சொன்னேன்..

நிருபர்: நிச்சய தார்த்தம் முடிஞ்ச பெண்ணை காதலித்து கரம் பிடிப்பதாக கதை அமைப்புள்ளதால் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறதாமே?

சிவகார்த்திகேயன்: அட அது ஏற்கனவே நம்ம தல அஜீத் நடிச்ச “காதல் மன்னன்” படத்துல இருந்து உருவினது.. உண்மையான காரணம் அது இல்லைங்க, நான் பெண் வேஷம் போட்டது சில ஹீரோயின்ஸ்க்கு பிடிக்கல அதான் மறைமுகமா ஆட்களை தூண்டிவிட்டு எதிர்க்குறாங்க.

நிருபர்: வேந்தர் மூவீஸ் மதன் எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மதன் ரெண்டு பேரிடமும் பணம் வாங்கி படம் நடிக்க மறுப்பதாக் ஒரு செய்தி வந்திருக்கே.

சிவகார்த்திகேயன்: அட அரசியல்ல தான் இந்த சசிகலா, சசிகலா புஷ்பான்னு ரெண்டு பேர் ஒரே பேர்ல குழப்புறாங்கன்னா, சினிமாவில் இந்த ரெண்டு மதன்கள் தொல்லை.. வேந்தர் மூவீஸ் மதன் மெடிக்கல் சீட்டுக்கு பணம் வாங்கிகிட்டு கண்கானாத இடத்துல செட்டில் ஆகிட்டார் அவரு இனிமே வந்து தொல்லை பண்ண மாட்டார். இந்த எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மதன் கிட்ட இருந்து தான் எஸ்கேப் ஆக முடியல.

நிருபர்: நீங்க மேடையில் அழுததும் சிம்புவும் விஷாலும் வரிந்து கட்டிக்கொண்டு வக்காலத்துக்கு வந்தாங்களே..

சிவகார்த்திகேயன்: நடிகர் சங்க தேர்தலில் ஓட்டுபதிவின் போது கூட்டத்தோட கூட்டமா விஷால் கன்னத்துல யாரோ ரெண்டு “அப்பு” அப்பிட்டாங்க, மனுஷன் மயக்கம் போட்டுட்டார் ஞாபகம் இல்லையா?, அப்புறம் சிம்பு வோட வாலு வருமா வராதாங்கிற கேள்வி அனுமார் வால் மாதிரி நீண்டுகிட்டே போச்சே அந்த காண்டுல தான் எனக்கு வக்காலத்து வாங்கினார்னு நினைக்கிறேன்.

நிருபர்: மூன்றழுத்து பெயர் கொண்ட ஒரு நடிகரால் தான் உங்களுக்கு பிரச்னைனு பேசிக்கிறாங்களே?

சிவகார்த்திகேயன்:: ஒரு வேளை என் முந்தைய படமான ‘ரஜினிமுருகன்’ படத்துல டீ கடையில் பாடுற சாக்கடை சாங்கு வைச்சதுனால அவரோட மருமகன் மூன்றழுத்து பெயர் கொண்ட 3 பட கதாநாயகனோட வேலையா இருக்குமோ? எனக்கும் சந்தேகமாத்தான் இருக்கு.dhanush-sivakarthikeyan

நிருபர்: யாரு தனுஷா?

சிவகார்த்திகேயன்:: தனுஷா இருக்கலாம், ரஜினியா இருக்கலாம், அஜித்தா இருக்கலாம், விஜய்யா இருக்கலாம், சிம்புவா இருக்கலாம், விஷாலா  இருக்கலாம், கமல்லா இருக்கலாம், சிவாஜியா இருக்கலாம், எம்.ஜி.ஆரா இருக்கலாம். இப்பிடி யாரவது இருக்கலாம்.

நிருபர்: என்னங்க குழப்பறீங்க.

சிவகார்த்திகேயன்:: ஊரை சொன்னாலும், பெயரை சொல்லக்கூடாதுல்ல. இப்படி பூடகமாத்தான் சொல்லணும்

நிருபர்: விஜய் டிவி யை கலாய்ச்சு ரெமோ படத்துல வசனம் வைச்சிருக்கீங்களாமே?

சிவகார்த்திகேயன்: இதுக்கு ரெமோ பட ஸ்டைல்ல பதில் சொல்லணும்னா, ஏறிவந்த ஏணியை உதைக்கும் போது “கண்ட்ரோல்” பண்றது கஷ்டம் ஆன “கன்பியூஸ்” பண்ணுறது ஈசி

நிருபர்: இயக்குனர் நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணனை கொஞ்ச நாள் வேலை இல்லாமல் வீட்டுக்கு அனுப்பி வச்சீங்களே..

(நிருபர் கேள்வியை முடிக்கும் முன்)

“என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா…” என்ற பாடலை பாடியபடி பிளைட்டை பிடிக்க ஓடினார்.

There are no comments yet