சென்னை: தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த 22-ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அப்போலோ மருத்துவமனை டாக்டர்களுடன் சேர்ந்து, லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியேல், எய்ம்ஸ் டாக்டர்கள் கில்மானி, நிதிஷ் நாயக், அஞ்சன் டிரிக்கா, சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் டாக்டர்கள் கொண்ட குழு, தொடர்ந்து ஜெயலலிதாவின் உடல்நிலையை கண்காணித்து வருகிறது. இந்நிலையில், அப்போலோ மருத்துவமனைக்கு இந்தியா முழுவதும் இருந்து அரசியல் தலைவர்கள் வந்தவண்ணம் உள்ளனர். தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களில், விஜயகாந்த் தவிர மற்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் அப்போலோ மருத்துவமனைக்கு வந்துவிட்டனர். ஆனால், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, அப்போலோவில் அட்மிட் ஆகி 30 நாட்கள் கடந்துவிட்டநிலையில், இந்தியப் பிரதமர் மோடி நேரில் வந்து ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி இன்னும் விசாரிக்கவில்லை.

கடந்த காலங்களில் அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். இதே அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலம் குன்றியிருந்த நிலையில் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி நேரில் வந்து நலம் விசாரித்தார். அதேபோல, ஜெயலலிதா கார் விபத்தில் காயமடைந்து சென்னை தேவகி மருத்துமனையில் சிகிச்சை பெற்றுவந்த போது ராஜீவ்காந்தி அவர்கள் நேரில் வருகை புரிந்து நலம் விசாரித்தார். ஆனால் மோடி இதுவரை ஜெயாவை வந்து பார்க்கவில்லை தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சிகிச்சைக்கு தேவையான உதவிகளை செய்துகொடுக்குமாறு மத்திய அரசுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்வரின் உடல்நிலை எப்படி உள்ளது? உண்மை நிலவரம் என்ன? என்பதை அறிந்து வரும்படி பிரதமர் அலுவலகத்திலிருந்து தமிழக பொறுப்பு ஆளுனர் வித்யாசாகர் ராவிற்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படியே, வித்யாசாகர் ராவ் இரண்டு முறை சென்னைக்கு வந்து அப்பல்லோ மருத்துவர்களைச் சந்தித்து முதல்வரின் உடல்நிலை குறித்து கேட்டு அறிந்துள்ளார்.

உச்ச நீதிமன்றம் அக்டோபர் 3-ம் தேதி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அக்டோபர் 4-ம் தேதிவரை அதற்கு கெடு விதித்தது. ஆனால், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கிறார் என்பதை கணக்குப்போட்ட மத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது என்று மறுத்தது. அதோடு, டெல்லியில் மோடியைச் சந்திக்கச் சென்ற 47 எம்.பி-க்களையும் பார்க்க மறுத்து, வாசலோடு திருப்பி அனுப்பினார் பிரதமர் நரேந்திர மோடி. ஜெயலலிதா நலமுடன் இருந்திருந்தால், இவ்வளவு பெரிய துரோகத்தை நிச்சயம் மத்திய அரசு செய்திருக்காது என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்து.modi-jaya

இத்தனைக்கும் மோடிக்கும் ஜெயலலிதாவுக்கும் அரசியல் கூட்டணி தவிர்த்து தனிப்பட்ட முறையில் நல்ல நட்பு உண்டு. மோடி குஜராத் முதல்வராக பதவியேற்றபோது, ஜெயலலிதா நேரில் போய் அந்த விழாவில் கலந்து கொண்டார். அதுபோல, இரண்டுமுறை போயஸ் கார்டன் வீட்டுக்கு வந்து மோடி விருந்து சாப்பிட்டுச் சென்றுள்ளார். இந்த அடிப்படையில் இன்றைய பிரதமராக இருக்கிற நரேந்திர மோடி அவர்களும் முதலமைச்சர் ஜெயலலிதாவை நலம் விசாரித்து தமிழக பாஜகவினர் கூடுதல் அரசியல் நன்மை தேடலாமே? ஏன் செய்யவில்லை?” என்று விசாரித்தபோது, பிரதமர் மோடி ஜெயலலிதாவை அப்பல்லோவில் அனுமதித்த அடுத்த வாரமே வந்து நலம் விசாரிக்க முடிவு செய்திருந்தாதகாகவும், ஆனால் நோய்த் தொற்று காரணமாக ஜெயாவை நேரில் சந்தித்து செல்ஃபி எடுக்க வாய்ப்பு இல்லாததால் அப்பல்லோ விஜயத்தை ரத்து செய்து விட்டதாகவும் ப.ஜ.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது முதல்வர் ஜெயலலிதா நல்லமுறையில் உடல் நலம் தேறி வருவதால், அவர் எப்படியும் அடுத்த ஓரிரு வாரங்களில் போயஸ் கார்டன் திரும்பலாம் எனத் தெரிகிறது, அதன் பின்னரே மோடி செல்ஃபி எடுக்க சென்னை வருவார் என டெல்லியில் இருந்து வரும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

There are no comments yet