சென்னை: விஷால்-தமன்னா ஜோடியாக நடித்துள்ள படமான ‘கத்தி சண்டை’ டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. வடிவேல், சூரி, ஜெகபதிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சுராஜ் இயக்கி உள்ளார். எஸ்.நந்தகோபால் தயாரித்துள்ளார். இந்த படத்தின் விழாவில் நடிகர் விஷால் கலந்துகொண்டு பேசியதாவது: “கத்தி சண்டை படம் சிறப்பாக வந்துள்ளது. இந்த படத்தில் நான் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு முக்கிய காரணம் வடிவேல். சினிமாவில் அவர் ஒரு சகாப்தம். வடிவேல் கதாபாத்திரத்தில் வேறு எந்த நடிகராலும் நடிக்க முடியாது. இந்த படத்தில் அவர் நடித்துள்ளது எங்களுக்கு பெருமை. அவரால் எனக்கு ‘திமிரு’ படத்தில் வெற்றி கிடைத்தது. நடிகர் சங்க தேர்தலில் என் அருகில் இருந்து வெற்றிபெற வைத்தார். இப்போது ‘கத்தி சண்டை’ படமும் வெற்றி பெற இருக்கிறது. நாங்கள் ஒவ்வொரு படத்தில் நடிக்கும்போதும் இந்த படம் திரைக்கு வருமா? வராதா? என்ற பயத்திலேயே நடிக்க வேண்டி உள்ளது. அந்த அளவுக்கு பிரச்சினைகள். இந்த படத்தில் அப்படி பயம் எதுவும் இல்லாமல் நடிக்க முடிந்தது. படங்கள் திரைக்கு வந்த உடனேயே விமர்சனங்களும் வந்து விடுகின்றன. படம் நன்றாக இல்லாவிட்டால் கிழிக்கிறார்கள். உடனடியாக விமர்சனங்களை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.
தொடர்ந்து நடிகர் வடிவேல் கலந்துகொண்டு பேசும்போது, “நான் நீண்ட நாட்களாக நடிக்கவில்லை என்று பேசுகிறார்கள். எனக்கு‘கேப்பு’ம் இல்லை ‘ஆப்பு’ம் இல்லை எப்பவும் இந்த வடிவேலு ‘டாப்பு’தான். நிறைய கதைகள் கேட்டு அவை பிடிக்காமல் போனதால் நீண்ட நாட்கள் நடிக்காமல் இருந்தேன். (என்று புருடா விட்டார்.) கத்திசண்டை கதை பிடித்ததால் மீண்டும் நடிக்க வந்து இருக்கிறேன். நான் நடிக்காமல் இருந்தபோதும் கூட சமூக வலைத்தளங்களில் அரசியல், சினிமா உள்ளிட்ட பல்வேறு “மீம்” களில் என்னைத்தான் பயன்படுத்தி இருந்தார்கள். இது எனக்கு கிடைத்த பெருமை. இந்த பெயர் புகழ் பணம் எல்லாம் மக்கள் தந்தது. அவர்கள் வாழ்க்கையில் இருந்துதான் நகைச்சுவைகளை எடுத்து சினிமாவில் தருகிறேன்” என்றார்.
தொடர்ந்து காருக்குள் ஏறப்போன இருவரையும் கபளீகரம் செய்து பேட்டி எடுத்த நமது கப்ஸா நிருபரிடம் இருவரும் கூறியதாவது: படம் தான் ‘கத்தி சண்டை’ எனக்கு ‘கத்தி’ கூட சண்டை போட தெரியாது. அதனால் தான் நடிகர் சங்க தேர்தலில் கன்னத்தில் அப்பு வாங்கியபோது கூட திருப்பி அடிக்க தெரியவில்லை. சிவ கார்த்திகேயன் மேடையில் அழுதபோது அந்த மேடையில் நான் இல்லாமல் போய்விட்டேன். இருந்திருந்திருந்தால் நானும் அவரும் சேர்ந்து ‘ஒப்பாரி’ வைத்து ஒரு அலப்பரையே பண்ணி இருப்போம். அவ்வளவு பிரச்சினைகள் எங்களால் நடிகைகளுக்கு. சங்க தேர்தலில் நான் கன்னத்தில் அடிபட்டபோது களிம்பு போட்டுவிட்டதால் வடிவேலுவை இந்த படத்தில் பயன் படுத்திக் கொண்டேன். பாகுபலி படத்தில் வாள்வீச்சில் பயிற்சி பெற்ற தமன்னா வை கதாநாயகியாக போட்டு பட்ஜெட்டை கட்டுக்குள் கொண்டு வந்தோம். கமல் கவுதமி செய்தது லிவிங் டுகெதர் நானும் நாட்டாமை மகள் வரலட்சுமி இருவரும் செய்தது லவ்விங் டுகெதர். அதையும் ட்விட்டரில் தான் பிரேக் அப் பண்ணிக் கொண்டோம் என்றார். வடிவேலு பேசுகையில், நான் நீண்ட நாட்களாக கால் ஷீட் இல்லாமல் பிய்ஞ்ச பெட்ஷீட்டை போத்தி தூங்கிக் கொண்டு இருந்தேன். விஷால் தம்பி தான் கைத்தாங்கலாக அழைத்து வந்து இந்த வேடத்தில் நடிக்க வைத்தார். மீம் களில் என் புகைப்படத்தையும் வசனங்களையும் பயன் படுத்துவோரிடம் இருந்து ராயல்டி வாங்கி தினமுன் தினமும் சிங்கிள் டீ குடித்து காலத்தை ஓட்டப்போகிறேன் என்று பரிதாபமாக பேட்டியை முடித்தார்.
There are no comments yet
Or use one of these social networks