சென்னை: 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை அரசும், ரிசர்வ் வங்கியும் கூறியதுபோல் எளிதாக மாற்ற முடியாமல் மக்கள் சில இடங்களில் கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். “நாடு முழுவதும் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது. இந்த உத்தரவு நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. பொதுமக்கள் தங்களிடம் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை வரும் 10-ம் தேதி முதல் டிசம்பர் 30-ம் தேதி வரை வங்கிகள் மற்றும் அஞ்சல் நிலையங்களில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம்” என்று பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை இரவு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதனால், தற்போது பொதுமக்கள் தங்களுடைய அத்தியாவசிய செலவுகளுக்கே கையில் பணம் இல்லாமல் மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
100 ரூபாய் மட்டுமே செல்லும் என்பதால், 100 ரூபாய் நோட்டுக்கு தற்போது கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கையில் உள்ள 500, 1000 ரூபாய்க்களை மக்கள் 100 ரூபாயாக மாற்றுவதால் தற்போது 100 ரூபாய் நோட்டு தான் அதிகபட்ச பணமாக உள்ளது. நேற்று பிரதமர் மோடி அறிவித்த பின்னர், பெரும்பாலான அரசு மதுபான கடைகளிலும் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை கடை ஊழியர்கள் வாங்க மறுத்து விட்டனர். இதனால், மதுபானங்கள் வாங்கச் சென்ற குடிமகன்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். சில இடங்களில் கடை ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் குடிமகன்கள் ஈடுபட்டனர். இந்நிலையில், குடிமகன்களுக்கு எளிய வகையில் மது கிடைக்க வழிவகை செய்யுமாறு அரசிற்கு தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் முன் வைத்துள்ளது.
இந்நிலையில் அப்போல்லோவில் கடந்த 50-நாட்களாக சிகிச்சை பெரும் முதல்வர் ஜெயலலிதா நேற்று ஒரு நொடி கண்விழித்த பொது அருகில் இருந்த நிதியமைச்சர் ஓ. பன்னிர்செல்வம் குடிமக்களின் இந்த கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். அப்போது முதல்வர் சைகையின் மூலம் டாஸ்மாக்கில் செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டுகளை ஏற்றுக்கொள்ள அனுமதி கொடுத்ததாக விபரமறியாத அப்பல்லோ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜப்பானில் சுற்றுலா சென்றிருக்கும் பிரதமர் மோடியிடம் இதற்கான சிறப்பு அனுமதியை வரும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியில் பேச்சு வார்த்தையின் போது வாங்கிக்கொள்ளலாம் என்றும் அம்மா சைகையிலேயே கூறியதாக தெரிகிறது. இதையடுத்து இன்று குடிமகன்களின் நிலையைக் கருத்தில் கொண்டு டாஸ்மாக் மற்றும் பார்களில் 500 மற்றும் 1000 நோட்டுகளைப் பெற்றுக்கொண்டு மது வழங்க அரசாணை பிறப்பிக்கப்படும் என்று நம்பத்தகாத செய்திக்குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது.
There are no comments yet
Or use one of these social networks