சென்னை: அப்பல்லோ ஆஸ்பத்திரியில் செப்டம்பர் 22–ந் தேதி உடல்நல குறைவு காரணமாக முதல்–அமைச்சர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். ஜெயலலிதா விரைவில் உடல்நலம் பெறவேண்டி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். அவருக்கு அப்பல்லோ டாக்டர்கள் குழுவினருடன், லண்டனை சேர்ந்த டாக்டர் ரிச்சர்டு பீலே, டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி டாக்டர்கள் கில்நானி, அஞ்சன் டிரிக்கா, சதீஷ் நாயக், சிங்கப்பூர் பிசியோதெரபி நிபுணர்கள் மேரி சியாங், சீமா, ஜூடி ஆகியோரும் சிகிச்சை அளித்துள்ளனர். தொடர் சிகிச்சையால் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அவர் வழக்கமான உணவுகளை சாப்பிடுவதாகவும், செயற்கை சுவாசம் இல்லாமல் நன்றாக சுவாசிப்பதாகவும் அப்பல்லோ டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியிட்ட ஓர் அறிக்கையில், அனைவரது பிரார்த்தனைகளால் தான் மறுபிறவி எடுத்துள்ளதாக கூறி இடைத் தேர்தல் நடைபெற உள்ள அரவக்குறிச்சி, தஞ்சாவூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதி வாக்காளர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அதில் அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனக் கோரியிருக்கிறார்.holoportation

இதையடுத்து நேற்று அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் விசாலாட்சி நெடுஞ்செழியனின் மறைவுக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொலைபேசியில் இரங்கல் தெரிவித்தார் என்பது தெரியவந்து உள்ளது. அவரது மகன் மதிவாணன் செய்தியாளரிடம் பேசுகையில், முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொலைபேசியில் இரங்கல் தெரிவித்தார் என்றார். செப்டம்பர் 22-ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர், முதலமைச்சர் ஜெயலலிதா தொலைபேசியில் தொடர்பு கொண்டதாக முதல்முறையாக தற்போது தான் அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்த சூழ்நிலையில், இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக, ஜெயலலிதா புது முறையில், நவீன தொழில்நுட்பத்தில் ஜீன்ஸ் படத்தில் ‘கண்ணோடு காண்பதெல்லாம்’ பாடலில் ஐஸ்வர்யா ராய் வருவது போல் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் ஜெயலலிதா தோன்றி பேசுவார் என அ.தி.மு.க. வட்டாரங்கள் அப்பல்லோவில் இருந்து கூறுகின்றன.

ஹாலோபோர்டேஷன் (Holoportation) எனப்படும் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் 3-D டெக்னாலஜியின் உதவியுடன் பிரச்சார மேடையில் ஜெயலலிதாவின் 3-D பிம்பம் தோன்றும் என்றும், நிஜ உருவம் போலவே இந்த பிம்பமும், நிகழ் நேரத்தில் அருகில் இருப்பவர்கள், நிருபர்களுடன் உரையாடும் என்றும் தெரிகிறது. இதை பிம்பத்தை அப்பல்லோவில் இருந்து ஜெயலலிதா இயக்குவார் என்றும் அப்பல்லோவில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இது குறித்து மேலும் விபரமறிய, நமது கப்ஸா நிருபர் அ.தி.மு.க.வின் முக்கிய பிரமுகரை தொடர்பு கொண்டபோது அவர் கூறியதாவது: இந்த இடைத் தேர்தல் எங்களுக்கு ஒரு சவால்தான். அம்மா இல்லாமல் வேட்பாளர்கள் எல்லாம் கலக்கம் அடைந்துள்ளனர். இது தவிர திடீரென்று மோடி 500, 1000 நோட்டுகளை வேறு செல்லாது என்று சொல்லிவிட்டார். எனவே பட்டுவாடாவும் தடைபட்டு விட்டது. 2000 ரூபாய் நோட்டுக்காக காத்திருக்கிறோம். அம்மா வெளியிட்ட அறிக்கையால் ஒன்றும் பிரயோஜனம் இல்லை. அம்மா ஒருமுறை வந்து முகத்தைக் காட்டி ஓட்டுப் போடுங்கள் என்று சொன்னாலே போதும், ஆனால் இப்போதைய நிலைமையில் அது முடியாது. எனவேதான் இந்த ஹாலோபோர்டேஷன் டெக்னாலஜி மூலம் அம்மா விர்ச்சுவல் 3-D முறையில் தோன்றி வேட்பாளர்களுக்காக பேசுவார் என நம்புகிறோம் என்று கூறினார்

There are no comments yet