சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நல குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 22ம் தேதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது ஜெயலலிதாவின் உடல்நிலை வேகமாக முன்னேற்றம் அடைந்து வருகிறது. அவர் மன மற்றும் உடல் ரீதியாக நலமாக இருப்பதாக அப்பல்லோ தலைவர் பிரதாப் சி.ரெட்டி சமீபத்தில் கூட பேட்டியளித்தார்.

தற்போது ஒரு நாளைக்கு 20 மணி நேரத்துக்கும் மேலாக குறிப்பாக, காலை தொடங்கி நள்ளிரவு வரை அவர் நன்றாக மூச்சுவிடுகிறார் என்றும், அவரது உடல்நிலை முன்னேற தொடங்கி உள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர். ஜெயலலிதா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, இன்னும் ஒரு சில நாட்களில் அவர் தனி வார்டுக்கு மாற்றப்படலாம் என்றும் அப்பல்லோ மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதற்காக தனி அறையும் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.apollo

எனவே விரைவில் டிஸ்சார்ஜ் ஆகி வழக்கம் போல் மக்கள் நல பணிகளை ஜெயலலலிதா கவனிப்பார் என தெரிகிறது. இந்நிலையில் இரண்டு மாதத்திற்கு மேலாக அப்பல்லோவில் ஜெயலலிதா தங்கி சிகிச்சை பெற்று வந்ததாலும், அவரை கவனிக்க இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, லண்டன் போன்ற நாடுகளில் இருந்து மருத்துவர்கள் வந்து கவனித்ததில், அவரது ஆஸ்பத்திரி பில் கோடிகளை எட்டும் என விவரமறியாத ஆந்தை ஒன்று தெரிவிக்கிறது. இந்த சூழ்நிலையில் நாடு முழுவதும் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு உள்ளதால் அதிர்ச்சியில் இருக்கும் போயஸ் கார்டன் வட்டாரங்கள் எப்படியாவது பழைய செல்லாத 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை அப்பல்லோவிற்கு கொடுத்து பில்லை செட்டில் செய்ய முடிவு செய்துள்ளதாக போயஸ் கார்டனில் வட்டமிட்ட கழுகு ஒன்று தெரிவித்துள்ளது. ஆனால் அப்பல்லோ அரசு மருத்துவமனை இல்லை என்பதால் இது சட்ட சிக்கலை உண்டு செய்யும் என்றும், அம்மா மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற உடனேயே அப்பல்லோவை அரசு மருத்துவ மனையாக மாற்றி பழைய செல்லாத 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை கொடுத்தால் பிரச்சினை இருக்காது என்று நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பகிர்

There are no comments yet