கோவை: ஈஷா பவுண்டேஷன் தலைமையகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கோவை வந்த மத்திய ஜவுளித்துறை அமைச்சர் மஸ்மிருதி இரானி, ஏர்போர்டிலேயே தனது செருப்பு பிய்ந்து போனதால், செய்தியாளர்களை சந்திப்பதை தவிர்த்து விட்டு காரில் ஏறிப் பறந்தார். பேரூர் சாலையில் சாலை ஓரத்தில் தனது காரை நிறுத்தி, கணேஷ் என்ற செருப்பு திருத்தும் தொழிலாளரிடம் கொடுத்து தைத்து விட்டு தன்னிடம் சில்லறை இல்லாததால், 100 ரூபாய் தாளை எடுத்து அவரிடம் நீட்டி உள்ளார். கணேஷோ தனது கூலி 10 ரூபாய் தான் என்று கூற, “கீப் த சேஞ்” என்றாராம் ஸ்மிருதி இரானி. இந்த சம்பவத்தின் போது, கணேஷிடம் உரையாடுவதற்கு உடனிருந்த தமிழ்க பாஜக துணைத்தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் மொழி பெயர்த்து உதவினாராம். மத்திய அமைச்சர் செருப்பு தைக்க சில்லறை இல்லாமல் திண்டாடிய செய்தி பத்திரிகை மற்றும் சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது.

smriti-iraniஇது குறித்த விபரமறிய புதிய 2000 நோட்டுக்கு சில்லறை கிடைக்காமல் ஷேர் ஆட்டோவை தவிர்த்து, தனது பிய்ந்து போன ஹவாய் செருப்புடன் நடந்தே சென்று வானதி ஸ்ரீனிவாசனை சந்தித்த கப்ஸா நிருபரிடம் அவர் கூறியதாவது: பாஜகவின் நோட்டு செல்லாது அறிவிப்பை கொச்சைப் படுத்தும் விதாமாக, சில வேண்டாத விஷமிகள், ஸ்மிருதி இரானி அவர்கள் செருப்பு தைக்க சில்லறை இல்லாமல் திண்டாடியதாக செய்தி வெளியிட்டுள்ளார்கள்.. உண்மையில் ஸ்மிருதி இரானி அவர்கள் புதிய 2000 ரூபாய் நோட்டில் உள்ள பாஜகவின் பிரச்சார உத்திகளை, மோடியா அருமை பெருமைகளை சமஸ்கிருத்தின் உதவியுடன் சாமானிய மனிதரான கணேஷிடம் பாடம் நடத்தவே காரை நிறுத்தினார். மொழி பெயர்ப்பளரான எனக்குத்தான் உண்மை தெரியும். புதிதாக அறிமுகப்படுத்தப் பட்டுள்ள 2000, 500 ரூபாய் நோட்டுகளில் கூடுதலாக தேவனாகரி வடிவத்தில் அதவாது சமஸ்கிருதத்தில், எண்கள் அச்சிடப்பட்டுள்ளன. மேலும் ‘தூய்மை இந்தியா, தூய்மையை நோக்கி மேலும் ஒருபடி என்று இந்தியில்’ அச்சாகி உள்ளது. நோட்டின் பின்புறம் பாஜகாவின் காவி நிறமும் மங்கள்யான் விண்கலமும் இடம்பெற்றுள்ளது, மேலும் திருஷ்டி கழியும் விதமாக சில எழுத்துப் பிழைகளையும் செய்துள்ளோம். இத்தகைய பெருமைகளை உடைய புதிய நோட்டுகளை அதிக அளவில் அச்சடித்து வழங்கி, வரும் காலங்களில் தேர்தல்களில் தொடர் வெற்றியே தக்க வைப்போம், தமிழகத்தில் மூன்றாவது இடத்தில் இருந்து முதல் இடத்திற்கு முன்னேறுவோம்” என்றார்

பகிர்

There are no comments yet