சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை கேள்விப்பட்ட நடிகர் அஜித்குமார் பல்கேரியாவில் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு பதினாறரை மணி நேரம் பயணம் செய்து ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்த வந்த செய்தி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா டிச.5ம் தேதி இரவு சுமார் 11.30 மணிக்கு காலமானதை கேள்விப்பட்ட அஜித் மிகவும் சோகத்தில் ஆழ்ந்து, நேரில் அஞ்சலி செலுத்தியாக வேண்டும் என்று உடனடியாக விமானம் ஏதும் கிடைக்காததால் கார் மூலமாகவும், விமானம் மூலமாகவும் பல்வேறு நாடுகளைக் கடந்து ஜெயலலிதா இறுதிச்சடங்கு முடிந்த பின்பு அதிகாலை நான்கரை மணிக்கு சென்னை மெரினா வந்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் மீண்டும் பல்கேரியாவுக்கு சென்று விட்டார். இது ஒரு புறமிருக்க தெலுங்கு மற்றும் மலையாள தொலைக்காட்சிகளில் தமிழகத்தின் அடுத்த முதல்வர் என நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அஜித்தின் பெயர் பிரதானமாக அடிபட்டது. இந்த செய்தி அஜித் ரசிகர்களால் காட்டுத்தீயென பகிரப்பட்டு, பின்னர் அஜித் தரப்பினரால் உண்மையல்ல என்று மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
sasi - jaya
இச்செய்தியின் உண்மை நிலையை கண்டறிய நமது கப்ஸா நிருபர் ரகசியமாக போயஸ் தோட்டத்தில் சசிகலா நடராஜனை சந்தித்த போது அமைச்சர்களுடன் அடுத்த் கட்ட ஆலோசனையில் பிஸியாக இருந்தவர் கூறியதாவது: அம்மா அப்பல்லோவில் அட்மிட் ஆனதுமே என் நினைவுக்கு வந்தவர் அஜித் தான். அஜித் என்றால் வெற்றி கொள்ள முடியாதவன் என்று பொருள். எம்ஜியார் மூன்றெழுத்து, அம்மா மூன்றெழுத்து, அஜித் மூன்றெழுத்து. அம்மாவும் பள்ளிபடிப்பு, அஜித்தும் பள்ளிப் படிப்புடன் நடிக்க வந்துவிட்டார். ‘சினிமா’ என்ற மூன்றெழுத்து பின்புலம் இல்லாததால் முதல்வர் வாய்ப்பு தற்காலிகமாக பன்னீருக்கு கிடைத்துள்ளது. ஒருமுறை கருணாநிதி பங்கேற்ற விழாவிலேயே ‘நடிகர்களை விழக்களில் பங்கேற்க கட்டயப்படுத்துகிறார்கள், நான் வேண்டுமானால் கட்சி தொடங்கி காட்டட்டுமா’ என்று முழக்கமிட்டவர் அஜித். அஜித் இப்படி பேசியதும், எப்ப வருவார் எப்படி வருவார் என்றே தெரியாத ரஜினி கூட எழுந்து நின்று கை தட்டினார். இந்த துணிச்சல் அம்மாவையும் என்னையும் வெகுவாக கவர்ந்தது. அம்மாவை க்ரிடிகல் கேரில் வைத்து கவனித்தது கொண்டது போல தற்காலிக முதல்வரான பன்னீர்செல்வதுக்கும் க்ரிடிகல் ட்ரீட்மெண்ட் கொடுத்து கொஞ்சம் கண்ட்ரோலில் வைக்க வேண்டியே அஜித்தை களமிறக்கினேன். ஆர்.கே. நகரில் அம்மாவின் இடத்தில போட்டியிட்டு அடுத்த புரட்சித்தலைவராக உருவெடுப்பார்” என்றார். தான் பேசிக்கொண்டு இருப்பது கலைஞருடனா, சசிகலாவுடனா என்று புரியாத கப்ஸா நிருபர் நல்ல சைக்கியாட்ரிஸ்டை தேடி ஓடினார்.

பகிர்

There are no comments yet