சென்னை: உடல்நலக் குறைவு காரணமாக டிசம்பர் 5 அன்று காலமான தமிழக முதல்வர் ஜெ ஜெயலலிதா சாவில் மர்மம் இருப்பதாக பிரதமர் மோடிக்கு நடிகை கவுதமி கடிதம் எழுதி உள்ளார். அக்கடிதத்தில் ‘ஜெயலலிதாவின் மர்மத்தில் சோகம் உள்ளது. முதலமைச்சராக இருந்தாலும் அவர் இறுதி காலத்தில் ‘அடிமைப்பெண்ணாக’ இருந்துள்ளார், இறந்துள்ளார். கடந்த சில மாதங்களாக நிலவிய சூழல், ஜெயலலிதாவின் சிகிச்சை குறித்து முடிவுகள் எடுத்தது யார், நலம் விசாரிக்க வந்த பிரபலங்களை சந்திக்க விடாமல் தடுத்தது யார், அரசியலில் சிறந்து விளங்கி, பெண்களுக்கு முன் மாதிரியாக இருந்து மக்களுக்கு பல நன்மைகள் செய்த ஒரு பெரிய தலைவிக்கே இந்த கதியா? இது குறித்து மக்களின் தலைவராக விளங்கும் மோடியாகிய நீங்கள் உண்மைகளை வெளிக்கொண்டு வர, ஆவன செய்ய வேண்டும்’ என்று கோரியுள்ளார். (முழு கடிதம் தமிழில் கீழே காண்க).gauthami-modi

இது குறித்து மேலும் விபரமறிய வீட்டில் மொட்டை மாடியில் தனது மகள் ஆல்பத்தை வெறித்தவாறு இருந்த கவுதமியை நமது கப்ஸா நிருபர் சந்தித்தபோது அவர் கூறியதாவது: “பத்தாண்டுகளுக்கும் மேலாக கமல் ஹாசனுடன் லிவிங் டு கெதரில் இருந்தேன். அப்போது சமைப்பது துணி துவைப்பது என வீட்டு வேலை சரியாக இருக்கும், பின்னர் நான் நோய்வாய்ப்பட்டிருந்தபோது கமலுக்கும் மற்றவர்களுக்கும் என்னை கவனிப்பதில் வேலை சரியாக இருக்கும். புற்று நோயில் இருந்து மீண்டு வந்து திருமணம் என்ற பந்தத்துக்குள் ஆட்படாமல் காதலுடன் வாழ்ந்து வந்த என் வாழ்க்கை ‘பாபநாசம்’ படத்திற்கு பிறகு ஸ்ருதியின் ‘நாச’ வேலையால் முடிவுக்கு வந்தது. இப்போது வீட்டில் வெட்டியாக உட்கார முடியவில்லை. கமல் இல்லாததால் வீட்டில் போர் அடிக்கிறது. ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது. கொடிய நோயில் இருந்த நானே மீண்டு வந்துவிட்டேன், சாதாரன காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு என்று அப்பல்லோவில் அட்மிட்டான அம்மாவை உயிர் போகும் அளவுக்கு கொண்டு சென்றது யார் என்று மக்கள் தெரிந்துகொள்ளவே மோடிக்கு கடிதம் எழுதினேன். ‘கமல்’ என்றால் தாமரை, என்னை 13 ஆண்டுகள் எந்த நிர்ப்பந்தங்களும் இன்றி வாழ வைத்த அந்த மலரின் சின்னத்தை கொண்ட கட்சி என்பதால் பாஜக வையும் மோடியையும் எனக்கு பிடிக்கும், அதனால் தான் கமலுடன் ப்ரேக் அப்புக்கு பிறகு மோடியை சந்தித்தேன். அது தவிர தோல்விப் படம் கொடுக்கும்போதெல்லாம் பப்ளிசிட்டி ஸ்டண்ட் அடிக்கும் சினிமாக் கலையை கமல்ஜியிடம் கற்றுக்கொண்டேன் அதனால் தான் மக்கள் இந்த கவுதமியை மறந்து விடக்கூடாது என்பதற்காக அம்மா மீது இந்த தீடீர் அக்கறை வந்து மோடிஜிக்கு கடிதம் எழுதினேன்” என்று கூறி தன் மகளின் புகைப்படங்கள் அடங்கிய ஆல்பத்தை எடுத்துக் கொண்டு சினிமா சான்ஸ் தேட காரில் ஏறிப் பறந்தார்.

________________________________________________________________

மோடிக்கு நடிகை கவுதமி கடிதம்

அன்புடையீர்,

நான், இந்தக் கடிதத்தை ஒரு சாதாரண இந்திய பிரஜையாக எழுதுகிறேன். நான், ஒரு குடும்பத் தலைவி; ஒரு தாய் மற்றும் பணியாற்றக் கூடிய பெண். என் வாழ்க்கையில் ஏற்படும் எல்லாத் துன்பங்களும் அதற்கான முக்கியத்துவம் கருதி நாட்டில் உள்ள சக மனிதர்களால் பகிரப்படுகிறது. இதில், பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தி மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதுதான் முதன்மையானது.

பல கோடி மக்களைப்போலவே நானும், தமிழ்நாட்டு முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதாவின் மரணச் செய்தியைக் கேட்டவுடன் அதிர்ச்சி அடைந்தேன். அவர், மிகச் சிறந்த தலைவர்; அத்துடன் அவர், பல பெண்களுக்கு உந்து சக்தியாக இருந்துள்ளார். என் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட அவருடைய ஆளுமைத் திறமை எப்போதும் ஒரு தூண்டுதலாகவே இருந்தது. தன்னுடைய பலத்தினால்… கஷ்டங்களை எதிர்த்துப் போராடும் ஜெயலலிதாவின் திறன்… ஆண், பெண் என எல்லோரும் தங்களுடைய கனவுகளை அடைய ஓர் உந்துதலாகவே இருந்துவந்தது.

அவருடைய மரணம் எல்லோரையும் சோகத்தில் ஆழ்த்தியது மட்டும் அல்லாமல், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல்… நடந்துவந்த சூழலும், பதில் தெரியாத சில கேள்விகளும் தொடர்ந்துகொண்டே இருந்தன. அவருடைய உடலில் ஏற்பட்ட பிரச்னைகள், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை, நலம் பெற்றார் என்ற தகவல் மற்றும் திடீர் மரணம்… இவை எதற்குமே பதில்கள் எதுவும் சரியாகக் கிடைக்கவில்லை. அவரின் உடல்நிலை குறித்த தகவல்கள் மூடி மறைத்த வண்ணமே காணப்பட்டது. மேலும், அவர் தங்கி சிகிச்சை பெற்றுவந்த மருத்துவமனைக்குள் யாரும் அவரைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை; அவர், உடல் நலம்பெற வேண்டும் என்று மனதார நேரில் சென்று வாழ்த்த நினைத்தவர்களுக்கும் அனுமதி இல்லை. மக்களின் பிரதிநிதியான ஒரு தலைவரின் நிலை எதற்காக ரகசியம் காக்கப்பட வேண்டும்.. அவரை, ஏன் தனிமைப்படுத்த வேண்டும்? அவரைப் பார்க்க அனுமதி இல்லை என்பதை யார் முடிவு செய்வது… ஜெயலலிதாவின் சிகிச்சை மற்றும் அக்கறை பற்றிய முடிவுகளை யார் எடுத்தார்கள்… மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய பொறுப்பு யாருக்கு உள்ளது? இதுபோன்ற பல கேள்விகள் தமிழக மக்களுக்கு உள்ளன. அவர்களுடைய குரலாகவே நான் இப்போது உங்களிடம் கேட்கிறேன்.

அவரின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர் இறந்துவிட்டார். இதில், எந்தச் சந்தேகமும் இல்லை என சிலர் கூறினாலும், இவை அனைத்தும் என்னுடைய தனிப்பட்ட கருத்து. நான் இந்தக் கேள்விகளைக் கேட்பதற்கு முக்கியக் காரணம், இந்தியக் குடிமகளான எனக்குக் கவலை தரக்கூடிய விஷயங்களைப் பற்றி அறிய வேண்டிய உரிமை எனக்குள்ளது. நாட்டினுடைய நிலைமையும், அவற்றுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் செய்ய வேண்டும். நமக்குப் பிடித்த தலைவருடைய நலனைப் பற்றிக் கவலைப்பட வேண்டியது அவசியம். இதுபோன்ற, மிக முக்கிய விஷயங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள கேள்விகள் கேட்காமல் இருக்கக் கூடாது. முக்கியமாக, அதற்கான பதில்கள் தெரியாமல் இருக்கவே கூடாது. நாட்டில் ஒரு தலைவருடைய நிலையைப் பற்றி அறியவே முடியாத பட்சத்தில் தனி மனிதருடைய உரிமையை எப்படிப் பெற முடியும்? மக்கள் அனைவரும், சுதந்திர இந்தியாவில் நடக்கும் பிரச்னைகளில் இருந்து காப்பாற்றிக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை வர வேண்டும்.

இந்தக் கடிதத்தை நான் எழுதக் காரணம், நாட்டில் நடக்கும் பிரச்னைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்பது எல்லாக் குடிமக்களுக்கும் தெரிய வேண்டும் என்ற என்னுடைய ஆதங்கத்தைப் பற்றி அறிந்து… பதில் அளிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்தான். நீங்கள் பல இடங்களில் தனி மனிதனுக்கான உரிமைகளைப் பெற்றுத் தர எந்த இடத்திலும் தயக்கம் இல்லாமல் செயல்பட்டிருக்கிறீர்கள். நாட்டு மக்களுடைய கோரிக்கையை கவனத்தில்கொண்டு பதில் அளிப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.’’

நம்பிக்கை மற்றும் மரியாதையுடன்,

ஜெய்ஹிந்த்!

கௌதமி தடிமல்லா

தமிழில்: நந்தினி சுப்பிரமணி

___________________________________________________________________

பகிர்

There are no comments yet