சென்னை: சசிகலாவை தலைமை பொறுப்பை ஏற்குமாறு அதிமுக.,நிர்வாகிகள் வலியுறுத்தியது தொடர்பாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடன்பிறந்த அண்ணன் ஜெயகுமாரின் மகளான தீபாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அது தொடர்பாக கருத்து தெரிவித்த தீபா, இது மிகவும் துரதிஷ்டவசமானது. தமிழக மக்கள் இதனை நிச்சயம் ஏற்க மாட்டார்கள் என்றார். தொடர்ந்து நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா என கேட்டதற்கு, அதில் தவறேதும் இல்லையே. அதற்கான வாய்ப்பு கிடைத்தால், அதற்கான களம் அமைந்தால் அரசியலுக்கு வர தயாராக உள்ளேன் என பதிலளித்தார். மேலும் அவர் கூறுகையில், கட்சியின் எதிர்காலம் குறித்து நன்கு ஆராய்ந்து, கவனித்து முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்றார்.

ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை, இருந்த இடமே தெரியாமல் இருந்த தீபா திடீரென்று முளைத்தது எப்படி என்ற கேள்விக்கு விடை தேடி, நமது கப்ஸா நிருபர், தீபாவை தேடிச்சென்று எடுத்த பேட்டியில் தீபா கூறியது: நான் ஜெயலலிதாவை சார்ந்தவள், அவர் ரத்தம் எனக்குள்ளே ஓடுகிறது. அதனால் அவருக்கு தெரிந்த எல்லா விஷயங்களும் எனக்கும் தெரியும். நான் என் அத்தை ஜெயலலிதாவுடன் பேசி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது, எனவே நானே அவரின் உண்மையான வாரிசு. அவரது வழியை பின் தொடர நான் விரும்புகிறேன். அப்படிப் பார்த்தால் சசிகலா எனக்கும் உடன் பிறவா சகோதரி.deepa

எனது அத்தை ஜெயலலிதாவுக்கு தெரியாமல் பல விஷயங்கள் நடந்துள்ளன. இவை எல்லாம் எனக்கும் தெரியாது. சசிகலாவை தனது வாரிசாக எனது அத்தை ஜெயலலிதா அறிவிக்க நினைத்து இருந்தால் 25 ஆண்டுகளுக்கு முன்பே அதை செய்து இருப்பார். ஏன் அதை செய்யவில்லை? இதுபற்றி அவர்கள் விளக்குவார்களா?. என்னையும், என் குடும்பத்தினரையும் என் அத்தை போயஸ்கார்டன் உள்ளேயே விடவில்லை. நாங்கள் நல்லவர்கள் என்றால் என் அத்தை அந்த முடிவை ஏன் எடுத்திருக்க வேண்டும்.

எனது அத்தை இறந்தது ஒரு சோகமான நிகழ்வு. உறவினர்களான எங்களுக்கு எந்த தகவலும் சொல்லப்படவில்லை. எங்களை கலந்து கொள்ளவும் சம்பிரதாய முறைப்படி அழைக்க வில்லை. எனது அத்தையின் இறுதி சடங்குகள், சம்பிரதாயங்கள் உரிய முறையில் பின்பற்றப்படவில்லை. என் அத்தை என் மீதும் என் குடும்பத்தினர் மீதும் அளவு கடந்த பாசத்துடன் இருந்தார். என் மீது அவருக்கு பாசம் அதிகம். அதனால் தான் எங்களை விட்டு விலகி இருந்தார். 10 ஆண்டுகளுக்கு முன்பு அவர் பிறந்த தினத்தன்று நான் பேசினேன். அதன் பிறகு அவர் என்னிடம் பேசவே இல்லை என்றாலும் என்மீது அவர் வைத்திருந்த பாசம் குறையவில்லை. ஸ்டாலின், சசிகலா புஷ்பா, சுப்ரமணிய சாமி மற்றும் வைகுண்டராஜனை தொடர்பு கொண்டு அவர்கள் விரும்பினால் அரசியலுக்கு வருவேன். சசிகலாவுக்கு ஆயிரம் பேர் கூடினால், எனக்கு ஒரு பத்து பேர் வராமலா போய் விடுவார்கள் என்று கூறி, அடுத்த முதல்வர் நான் தான் என்று சொன்னார்கள், அது மாதிரியெல்லாம் நடக்குமா என்று அப்பாவியாக நம்மை கேட்டார்.

There are no comments yet