சென்னை: ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமார் மகள் தீபா. இவரது சகோதரர் தீபக்தான் ஜெயலலிதாவுக்கு சசிகலாவுடன் இணைந்து இறுதி சடங்குகளை செய்தவர். அதிமுக-வின் தலைமையை சசிகலா தான் ஏற்கவேண்டும் என்று கட்சியின் மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், அவருக்கு கட்சியில் சிலர் எதிர்ப்பு தெரிவிப்பதுடன், தீபாவுக்கு ஆதரவாகவும் குரல் கொடுக்கின்றனர்.
இந்த நிலையில், தீபா மாயமாகியுள்ளதாக, பெங்களூரைச் சேர்ந்த அமிர்தா புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஜெயலலிதாவின் தங்கை என அவ்வப்போது ஊடகங்களில் அடிபட்ட பெங்களூர் சைலஜாவின் மகள்தான் இந்த அமிர்தா. ஜெயலலிதாவின் பெற்றோர் ஜெயராமன் – சந்தியா தம்பதியினருக்கு பிறந்த கடைசி மகள் தான் என்றும், தாயார் சந்தியா தன்னை ஆர்ட் டைரக்டர் பி.தாமோதரப் பிள்ளையிடம் வளர்க்கக் கொடுத்துவிட்டார் என்றும் கூறி வந்தவர் சைலஜா. இவர் கடந்த ஆண்டு காலமாகிவிட்டார். இந்த சைலஜாவின் மகள் தான் அமிர்தா.
இவர் பெங்களூர் மிர்ரர் என்ற பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், “தீபாவும் நானும் நீண்டகாலமாக தொடர்பில் இருந்து வருகிறோம். என்னுடைய பெரியம்மா ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் அதிகமான தொடர்பில் இருந்து வருகிறோம். சசிகலா தொடர்பாக தீபா தம்முடைய கருத்துகளைத் தெரிவித்த நிலையில் நாங்கள் இருவரும் சந்தித்து இப்பிரச்சனையை கையிலெடுக்க முடிவு செய்திருந்தோம். இது தொடர்பாக ஆலோசனை நடத்த சென்னையில் உள்ள தம்முடைய வீட்டுக்கு வருமாறு தீபா அழைத்திருந்தார்.
தீபா அழைத்ததைத் தொடர்ந்து சென்னைக்கு நான் திங்கள்கிழமையன்று வந்தேன். ஆனால் தீபாவின் வீடு பூட்டப்பட்டுள்ளது. அவரது வீட்டு வேலையாட்களும் அங்கு இல்லை. அவரது செல்போனுக்கு திங்கள்கிழமை முதல் தொடர்பு கொண்டு வருகிறேன். ஆனால் அவரது போன் தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறது.
சசிகலாவை விமர்சித்த நிலையில் தீபா எங்கிருக்கிறார் என தெரியாதது அச்சத்தை ஏற்படுத்துகிறது. தீபா பாதுகாப்பாக இருப்பார் என்ற நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து, நமது கப்ஸா நிருபருக்கு தீபா அளித்த பேட்டியில், வர்தா புயலுக்கு பயந்து வீட்டை பூட்டிக்கொண்டு சொந்தக்காரர்கள் வீட்டுக்கு போய்விட்டேன். இரண்டு நாட்களாக சென்னையில் கரண்டும் இல்லை செல்போனும் வேலை செய்யவில்லை. அட் லீஸ்ட் இதனால கொஞ்சம் பப்ளிசிட்டி கெடச்சுதே என்று கூலாக சொன்னார்.
There are no comments yet
Or use one of these social networks