சென்னை: சென்னையின் பசுமையை ஒரு ரப்பர் வைத்து அழித்தது போல அழித்து விட்ட வார்தா புயலால் ஒரு லட்சம் மரங்கள் மரணித்திருப்பதாக கூறப்படுகிறது. தாக்குப்பிடித்து நிற்கும் மரங்களும் கிளைகள் ஒடிந்து விழுந்து, மரங்கள் விழாத தெருக்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு சென்னை நகரம் உருக்குலைந்துள்ளது. முக்கிய சாலைகளில் மட்டும் மரங்களை வெட்டி ஓரமாய் போட்டு விட்டு வாகனப் போக்குவரத்து சீரமைக்கப்பட்டுள்ளது. இயற்கை அன்னையின் கிளைகளாய் வேர் பரப்பிய மரங்களின் இழப்பை மக்கள் எப்படி எதிர்கொள்வார்கள் என்பது குறித்த கவலை சென்னை மக்களிடையே எழுந்துள்ளது. இனி நடப்போகும் மரக்கன்றுகள் ஆழமாக வேர் விடக் கூடியவையாகவும் நல்ல பயன் தருபவையாகவும் இருக்கும்படி பார்த்து நடுவது வருங்காலத்திற்கு நல்லது என்று நடிகர் விவேக் முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் நமது கப்ஸா நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: “வன்னியர் சங்கத் தலைவராக தன் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய நான் ‘கோடாலி’ மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக, 1980களில் குடிதாங்கி என்ற ஊரில் நடந்த வன்னியர் பிரச்னையில், தென் மாவட்டங்களுக்கும் வட மாவட்டங்களுக்கும் நெடுஞ்சாலையின் குறுக்கே மரங்களை வெட்டிப் போட்டு 10 நாட்களுக்கு போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்தவன். எனக்கு போட்டியாக இந்த ‘வார்தா புயல்’ லட்சக்கணக்கான மரங்களை சாய்ப்பதா? மரம் என்றால் மக்கள் நினைவுக்கு ராமதாசும், கோடாலியும் நினைவுக்கு வரவேண்டும் என்ற நிலைக்கு மாற்றாக செயல் பட்ட ‘வார்தா’வை வன்மையாகக் கண்டிக்கிறேன். வானிலை அறிவிப்புகளை வெளியிடுவதற்கென அரசாங்கம் பாலச்சந்திரனை நியமித்திருக்கிறது அந்த பதவியில் ஒரு வன்னியரை நியமிக்கும் வரை வானிலை ஆய்வு மையத்தில் உள்ள மரங்களை வெட்டி மொட்டைக் காடாக்காமல் விடமாட்டோம்” என்று கோபமாக கூறினார்.
There are no comments yet
Or use one of these social networks