புது டெல்லி: மக்கள் நல கூட்டணியை சேர்ந்த சிறுத்தை திருமா காங்கிரசுக்கும், ராகுலுக்கு வால் பிடித்தும் கொண்டிருப்பதும், புலி வைகோ தாமரையை தாங்கிப் பிடிப்பதும் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் வைகோ, பிரதமர் நரேந்திர மோடியை இன்று டெல்லி நாடாளுமன்றத்தில் உள்ள பிரதமர் அலுலகத்தில் சந்தித்தார் என்ற செய்தியறிந்த நமது கப்ஸா நிருபர் வைகோவை எடுத்த பிரத்யேகப் பேட்டியில் அவர் கூறியதாவது:
500, 1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தவுடன் முழுமையாக வரவேற்றவன் நான். மிக சதுர்யமாக கருப்பு பணத்தையும், ஊழலையும் ஒழிக்க எடுக்கப்பட்ட சாகசமான முயற்சியை பாராட்டுகிறேன் என கூறியிருந்தேன். இந்த திடீர் முடிவினால் சாதாரண மக்கள், நடுத்தர மக்கள், மற்றும் என்னைப் போல் சிறுக, சிறுக சேமித்தவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளனர். என்னுடைய பழைய நோட்டுகளை இன்னும் மாற்ற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு முழுமையாக ரூ.500 நோட்டு இன்னும் வரவில்லை. ரூ.2000 நோட்டுகள் தான் தருகின்றனர், அதில் சிப் இருக்கிறது என்று பயமுறுத்தியதால் அதை வாங்காமல் இருக்கிறேன்.
இவ்வளவு நெருக்கமாக இருந்தும் மோடி இதைப்பற்றி என்னிடம் ஒரு வார்த்தை சொல்லவில்லை. இல்லாவிட்டால் முன்பே தயார் நிலையில் வைத்து எல்லா ஏற்பாடுகளையும் செய்து இருப்பேன். இப்போது எனக்கும், என் குடும்பத்தினர் மற்றும் கட்சியினருக்கு ஏற்பட்டு உள்ள சிரமத்தை உணர்ந்து கவலைப்படுகிறேன். கடந்த இரண்டு மாதங்களாக நிம்மதியாக தூங்கி இருக்க முடியவில்லை. இந்த என்னுடைய கவலையெல்லாம் எடுத்துச் சொன்னேன். பழைய நோட்டுகள் இன்னும் நிறைய இருப்பதால், நோட்டுகளை மாற்ற இன்னும் கொஞ்சம் கால அவகாசம் வேண்டும் என்றேன், இதுகுறித்து அருண் ஜெட்லியுடன் ஆலோசித்து எனக்கு முடிவு சொல்வதாக மோடி கூறினார்” என வைகோ தெரிவித்தார்.
There are no comments yet
Or use one of these social networks