சென்னை: மறைந்த தமிழக முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் உடல் மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் எம்ஜிஆரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட பகுதிக்கு பின்புறமாக அடக்கம் செய்யப்பட்டு சமாதி அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்களும் அதிமுக தொண்டர்களும் தினமும் ஜெயலலிதாவின் சமாதியைப் பார்க்க குவிந்த வண்ணம் உள்ளனர்.

jj-memorial2
Picture by: Sitran

ஜெயலலிதா இறுதிச்சடங்கின் போது நமது கப்ஸா நிருபர் உங்கள் நியூஸ், அலுவலகத்தில் மற்ற செய்தி சேகரிப்பில் பிசியாக இருந்ததாலும், பின்னர் ‘வார்தா’ புயலால் பாதிக்கப்பட்டு சோறு தண்ணீர் கரண்ட் இல்லாமல் அவதிப்பட்டு, ஜெயலலிதாவின் சமாதியில் இலவச உணவு வழங்கப்படுவது தெரிந்து அங்கு விரைந்து பசியாறி செய்தி சேகரித்தார்.

மெரீனாவில் சுண்டல் விற்ற பெண்களும், சிறுவர்களும் வியாபாரம் சக்கை போடு போடுவதால், ஒட்டு மொத்தமாக எம்ஜிஆர் நினைவிடத்தை முற்றுகை இட்டுள்ளதால் கடற்கரை நீரில் கால் நனைத்து விளையாடும் காதலர்கள் நிம்மதியாக உள்ளனர். மக்கள் குறிப்பாக பெண்கள் ஏதோ திருமணத்திற்கு போவது போலவும், வண்டலூர் பூங்காவில் சுற்றிப்பார்க்க வருவது போலவும் பட்டுப்புடவை சரசரக்க நகைகளுடன் வருவதால் பிக்பாக்கெட் காரார்கள் நோட்டு பிரச்சினையால் இருந்த சங்கடம் நீங்கியதாக நமது கப்ஸா நிருபரிடம் கூறினர். பைக், கார் போன்றவை அதிகளவில் வருவதால் போக்குவரத்து போலீசுக்கு நல்ல வசூல் வேட்டை நடைபெறுகிறது.

Picture by: Sitran
Picture by: Sitran

திருப்பதிக்கு செல்ல இருந்த குழுக்கள்இங்கு சீப்பாக மொட்டை அடிக்கப்படுவதால், இங்கு மொட்டை போட்டு கடலில் குளித்து விட்டு செல்கின்றனர். சிலர் இங்கு திருமணம் செய்து மண்டப செலவை மிச்சப்படுத்தி, செல்பி எடுத்து சமூக வலை தளங்களில் பதிவிட்டு லைக்குகளை அள்ளுகின்றனர். குறைந்தபட்சம் 200 காவலர்களாவது இங்கு பணியில் உள்ளனர், வரும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் பொதுமக்களுடன் சண்டை போடுகின்றனர். பொது மக்கள் ‘செல்வி’ சமாதியில் ‘செல்பி’ எடுப்பதில் மும்முரமாக உள்ளனர். தினமும் மாலை வேளைகளில், அதிமுக கரை பார்டர் போட்ட புடவை அணிந்த கிழவிகள் சிலர் சமாதிக்கு அருகே ‘ஒப்பாரி’ வைத்து ‘சிம்பதி’யை மெயிண்டைன் பண்ண சிம்பொனி இசை வழங்குகின்றனர். அம்மாவின் புகைப்படங்கள் அடங்கிய கீ செயின்கள், போட்டோ பிரேம்கள் விற்பனையும் நடைபெறுகிறதுjj-memorial

எல்லாவற்றுக்கும் மேலாக நமது கப்ஸா நிருபரின் பசியாற்றிய இலவச உணவு வாங்க ஒரு நீண்ட வரிசையில் மக்கள் காத்து நிற்கின்றனர். அவற்றை அங்கேயே சாப்பிட்டு விட்டு குப்பைகளை வீசி சிங்காரச் சென்னையை மேலும் அசிங்கப் படுத்துகின்றனர். கப்ஸா நிருபரின் இந்த ரகசிய விசிட்டில் இந்த நடவடிக்கைகளின் பின்புலமாக ‘சின்ன அம்மா’ சசிகலா இருப்பது தெரிய வந்துள்ளது. அதன் படி எதிர்வரும் ஆர்கே நகர் இடைத்தேர்தல் வாக்குப்திவை அம்மா சமாதியில் நடத்தினால், கண்ணீர் சிந்த வரும் வாக்காளர்களின் கருணை ஓட்டுக்களை அள்ளி பொதுச்செயலாளர், முதல்வர் பதவிகளை தக்க வைக்கலாம் என்று திட்டம் வகுத்துள்ளாராம். அதற்காகவே தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் இலவச உணவு வழங்கப்படுகிறதாம். மேலும் முழுவதுமாக கட்டுமானப் பணிகளை முடித்த பிறகு இதை ஒரு சுற்றுலா தலமாக அறிவித்து, அன்னிய செலாவணியை ஈட்டவும், நெடுஞ்சாலைகளில் மூடப்படவிருக்கும் டாஸ்மாக்குகளின் கணிசமான எண்ணிக்கையை மெரீனாவை சுற்றி அமைத்து வருமானத்தை பெருக்கவும் எண்ணம் உள்ளதாக நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பகிர்

There are no comments yet