சென்னை: காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கலைஞரை பார்க்க வந்த ம.தி.மு.க தலைவர் வைகோ வை அங்கு கூடியிருந்த திமுக தொண்டர்கள் உள்ளே விடாமல் கையில் காலணிகளி உயர்த்திக் காட்டி, கற்களை வீசியும், கோஷங்களை எழுப்பியும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மதிமுக தொண்டர்களும் திமுக தொண்டர்களும் கைகலப்பில் ஈடுபட்டனர். பதட்டமான சூழல் ஏற்பட்டதால், காரை திருப்பிக்கொண்டு கலைஞரை சந்திக்காமலே சென்று விட்டார் வைகோ.
சற்று தூரம் சென்று காரை நிறுத்திய வைகோ, எந்த நிகழ்வு நடந்தாலும் கழுத்து நரம்பு புடைக்க தனது டிரேடு மார்க் அறிக்கையை விடும் வழக்கத்திற்கு இழுக்கு ஏற்பட்டு விடும் என்பதால் நமது கப்ஸா நிருபரை செல்போனில் தொடர்பு கொண்டு பேட்டியளித்தார், அப்போது அவர் கூறியதாவது: “நவம்பர் தொடக்கத்தில் கருணாநிதி உடல் நலம் பாதிக்கப்பட்ட போது கனிமொழியிடம் விசாரித்தேன். உடம்பில் கொப்புளம் என்றார்கள். கலைஞரிடம் கற்ற ராஜதந்திரம் போல அதுவும் எனக்கு தொற்றிவிடும் என்பதற்காக நல விசாரிப்பை ஒத்திப்போட்டேன். டிச.15 ஆம் தேதி தலைவரின் உடல் நலம் மீண்டும் பாதிக்கப்பட்டது என்று அறிந்தேன், அப்போது நோட்டு மாற்ற அவகாசம் கேட்டு பிரதமர் மோடியை சந்தித்துவிட்டு திரும்பிய களைப்பில் இருந்தேன். அதனால் உடனடியாக செல்லவில்லை. கலைஞர் உடல் நலம் குன்றி ஆஸ்பத்திரிக்கு செல்வது நாளொரு வண்ணம் பொழுதொரு மேனியாக நடப்பதை மக்கள் அறிவார்கள், அந்தக் காலத்தில் கருப்பு வெள்ளை டிவியில் பார்த்தார்கள், பின்னர் சாலிடர் கலர் டிவியில் பார்த்தார்கள், பின்னர் எல்சிடி, எல்ஈடி தொலைக்காட்சி தற்போது ஸ்மார்ட் டிவியில் 4கே ரெசொல்யூசனில் பார்க்கிறார்கள் அவர் வைரம் பாய்ந்த கட்டுமரம். அவர் உடம்புக்கு ஒன்றும் ஆகாது.
நான் தலைவரை நேரில் சந்தித்து கபால மோட்சம் கொடுத்து அவரை குணமடையச்செய்து கோபாலபுரம் அழைத்துச் செல்லத்தான் காவேரிக்கு சென்றேன். அதை முன்கூட்டியே அறிந்து ‘பிள்ளை’ யையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டி விட்ட கதையாக, திமுக வில் முக்கிய பொறுப்பில் இருந்தும் தலைமை ஏற்க முடியாமல், இது போன்ற தக்குதல்களுக்கும், அடாவடி செயல்களுக்கும் இளைஞர்களை வழி நடத்தும் முதியவர் ஒருவர் செய்த போன் கால் தான் என்பதை தெரிந்து கொண்டேன்.” என்று வருத்தப்பட்டார்.
There are no comments yet
Or use one of these social networks