சென்னை: தமிழக முதல்வர் ஜெயாவின் மறைவால், அதிமுக வில் ஒரு மிகப்பெரிய வெற்றிடம் விழுந்துள்ளது. கட்சி தலமைப் பொறுப்பை ஏற்று, கட்சி பிளவு படாமல் இருக்க மூத்த நிர்வாகிகள் சசிகலாவை பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்ந்தெடுப்பது என்று ஒரு மனதாக முடிவெடுத்த வேளையில், தொண்டர்கள் பலர் அதிருப்தியில் உள்ளனர். அதில் ஒரு பிரிவினர் ஜெயாவின் அண்ணன் மகள் தீபாவை தலைமை ஏற்க அழைப்பு விடுத்து போஸ்டர்கள் பேனர்கள் என்று அமர்க்களப்படுத்தி வருகின்றனர். ஜெயாவின் நல்லடக்கம் முடிந்தவுடன் தீபா ஊடகங்களுக்கு ‘தேவைப்பட்டால் அரசியலுக்கு வருவேன்’ என்று பேட்டியளித்தார். அதன் பிறகு தீபாவை பேட்டி எடுக்க பல ஊடகங்கள் முயன்ற நிலையில், அதிகார பூர்வ அறிவிப்பு வருவதற்கு முன்பே ஜெயா இறந்ததாக செய்தி வெளியிட்டு பின்னர் ‘ஜகா’ வாங்கிய தந்தி டிவி ரங்கராஜ் பாண்டே தீபாவை ‘கேள்விக்கென்ன பதில்’ நிகழ்ச்சி மூலம் பேட்டியெடுத்து ஒரு டிரைலரை வெளியிட்டார். ஆனால் திட்டமிட்ட நாளில் பேட்டியை ஒளிபரப்பாமல், தமிழக அமைச்சர் தங்கமணியின் பேட்டியை ஒளிபரப்பினர். இதனால் தந்தி டிவிக்கு மிரட்டல் வந்திருக்க கூடும் எனவும், அல்லது சேனலின் டி ஆர் பி ரேட்டிங்கை உயர்த்தி விளம்பர வருமானம் ஈட்ட தந்திரமாக தந்தி டிவி செயல்படுகிறதா என பல கேள்விகள் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளன.sasikala1

இது குறித்து நமது கப்ஸா நிருபரிடம் ரங்கராஜ் பாண்டே கூறியதாவது: “பேட்டி குறித்த டிரைலர் வெளியான அன்று இரவு எனது தூக்கத்தில் கனவில் சின்னம்மா தோன்றி மிரட்டல் விடும் தொனியில் பேசி, தந்தி டிவியை ஜெயா டிவியுடன் இணைக்கப் போகிறேன் என்று கூறியதால் தீபா பேட்டியை இரண்டு நாட்களுக்கு ஒத்தி வைத்தோம். என்னைப்போல் தீபா ஜர்னலிசம் படித்தவர், அட்வர்டைசிங் ஸ்டிரேடஜி, பப்ளிசிட்டி ஸ்டண்ட் பற்றி அவருக்கும் தெரியும், முதலில் நான் வழக்கம் போல் சூடான கேள்விகளை தயார் செய்து வைத்திருந்தேன். கனவில் சசிகலா சொன்ன பிறகு, தீபாவிடமே கேள்வி பதில் இரண்டையும் தயார் செய்யச் சொன்னேன், அதில் தீபா முதன் முதலில் பள்ளிக்கு சென்றது, குச்சி மிட்டாய், கமர்கட் வாங்கி சாப்பிட்டது, மழை நீரில் கப்பல் விட்டது, ஏப்ரல் 1 தேதி தனது பள்ளியில் நண்பர்கள் மீது இங்க் அடித்து விளையாடியது போன்ற தமிழக அரசியலுக்கு தேவையான கேள்விகள் அடங்கும்படி பார்த்துக் கொண்டோம். இந்த பேட்டி வார்தா புயலுக்கு விடுமுறையில் வீட்டில் விளையாடி பொழுதைக்கழித்துக் கொண்டிருக்கும் பள்ளி மாணவர்களிடையே பெரும் வரவேற்பை பெறும் என்று நம்புகிறோம்..” என்று தொடை நடுங்கியபடி கூறினார்.

பகிர்

There are no comments yet