சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு, சட்டமன்றம் நடப்பது புனித ஜார்ஜ் கோட்டையிலா அல்லது போயஸ் தோட்டத்திலா என்று சந்தேகிக்கும் அளவுக்கு அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலாவை ‘சின்னம்மா’ என்று திடீர் பாசத்துடன் சந்தித்து ஆறுதல் கூறி வருவது அன்றாட நிகழ்வாகி வருகிறது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் சசிகலாவே அடுத்த பொதுச் செயலாளராகவும் முதல்வராகவும் வரவேண்டும் என்றும் தீர்மானம் நிறைவற்றப்பட்டு வருகிறது. இதனால் ஓபிஎஸ்சின் முதல்வர் பதவி பறிபோகும் நிலை உருவாகி உள்ளது. இந்நிலையில் தேனியை சேர்ந்த்த ஆட்டோ ஓட்டுநர் செந்தில்குமார் தம்பதி சகிதம் குழந்தையுடன் சசிகலாவிடம் பெயர் வைக்கும்படி சொல்ல, அக்குழந்தைக்கு ‘ஜெயலலிதா’ என்று பெயர் சூட்டினார் ‘சின்னம்மா’ சசிகலா.sasikala-suspended

குழந்தைக்கு பழைய செல்லாத 1000 ரூபாய் நோட்டை அன்பளிப்பாக கொடுத்த சசிகலா நமது கப்ஸா நிருபரிடம் கூறியதாவது: சரியாக ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 19 டிச. 2011 என்னையும் என் உறவினர்கள் 13 பேரையும் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கினார் அம்மா.. ஆனால் காலச்சுழற்சியில் என் திறமையினால் நான் அம்மாவின் அமோக ஆதரவைப்பெற்று, பின்னர் அம்மா மறைந்து, நானே அதிமுகவை கைப்பற்றும் நாளும் வந்துவிட்டது, 30 ஆண்டுகள் நான் அம்மாவுடன் இருந்ததற்கு பயன் கிடைத்துள்ளது. அம்மா மீது உள்ள பாசத்தால் தான் சில தொண்டர்கள் என்னைக் கேள்வி கேட்கிறார்கள், அம்மாவின் மரணத்தை சந்தேகிக்கிறார்கள், அவர்கள் வாயை அடைக்கவும் ‘அம்மா’ என்பவர் ஒருவரே என்ற பிம்பத்தை உடைக்கவும் என்னிடம் பெயர் வைக்க சொல்லி கொண்டு வரும் பெண் குழந்தைகளுக்கும், ஆண் குழந்தைகளுக்கும் ‘ஜெயலலிதா’ என்றே பெயர் வைக்கத் தொடங்கிவிட்டேன். இப்படி ஒவ்வோர் ஊருக்கும் நூறு ஜெயலலிதாக்கள் வந்து விட்டால் அந்தப் பெயர் சாதாரண பெயராகி ‘சசிகலா’ என்ற பெயர் தனித்துவம் பெற்று ‘சின்னம்மா’ என்ற பட்டம் ‘அம்மா’ ஆகிவிடும். இனி புவியில் பிறக்கும் பல ஆயிரம் ஜெயலலிதாக்கள் என் அடிமைகளாகி விழுந்து வணங்குவர். இதன் முதல் கட்டமாகத்தான் பேருந்து நிலையங்களில் விற்கப்படும் அம்மா குடிநீரில் ஜெயலலிதாவின் படத்தை எடுத்துவிட்டோம், வர்தா புயலின் போதும் எனது படம் அச்சடித்த சின்னம்மா ஸ்டிக்கர்களை அறிமுகம் செய்தோம், என்று கர்வத்துடன் சிரித்தார்..

பகிர்

There are no comments yet