சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருக்கும் வரை எங்கிருந்தார் என்றே தெரியாதா ‘திடீர்’ தீபா, ‘தேவைப்பட்டால் நான் அரசியலுக்கு வருவேன்’ என்று பேட்டி அளித்தார். இதற்கிடையே தந்தி டிவி ரங்கராஜ் பாண்டே தீபாவை பேட்டி எடுத்து ஒரு டிரைலரை வெளியிட்டார், ஆனால் ரிலீஸ் தேதி அறிவித்து வெளியாகாமல் போன சினிமா போல சொன்ன தேதியில் பேட்டி வெளியாகவில்லை, ரங்கராஜ் மிரட்டலுக்கு உள்ளானாரா என்ற கேள்வி எழுந்தது, பின்னர் இரண்டு நாட்கள் கழித்து திங்கட்கிழமை பல ‘வெட்டிங் அண்டு ஒட்டிங்’ வேலைகளுக்கு பிறகு வெளியானது. அந்த பேட்டியில் அரசியல் நீங்கலாக, தன் ‘அத்தை’ ஜெயலலிதா பற்றியும், தனது சிறுவயது, படிப்பு, மற்றும் தனது திருமணத்துக்கு ஜெயலலிதா வராதது, வளர்ப்பு மகன் அறிவிப்பால் தனது தந்தை இறந்தது, வளர்ப்பு மகன் திருமணத்துக்கு தீபா குடும்பத்தினர் செல்லாதது, தன்னை போயஸ் தோட்டத்துக்குள் நுழைய விடாமல் பிறர் தடுத்தது, போன்ற குடும்ப நயவஞ்சக விஷயங்களை மட்டும் பகிர்ந்து கொண்டு நேயர்களை கடுப்பேற்றினார். கட்சியில் அவரது எதிர்கால லட்சியம், ஜெயலலிதாவின் சொத்து விபரம், உயில் விபரம், அரசியல் நண்பர்கள், அப்பல்லோ விவகாரம் தொடர்பாக பல உண்மைகளை வெளியிடுவார் என்று எண்ணியிருந்த அரசியல் ஆர்வலர்கள் ஆசையில் மண்ணைப்போட்டார்.

பள பளப்பாக இருக்க வேண்டிய பேட்டி இப்படி பிசு பிசுப்பாக போய் விட்டதே என்று வருத்தத்தில் இருந்த தீபாவை நமது கப்ஸா நிருபர் தைரியம் சொல்லி தேற்றி ‘நீங்கள் தான் அடுத்த சின்ன அம்மா’ என்று உசுப்பேற்றி எடுத்த பேட்டியில் தீபா கூறியதாவது: நான் தந்தி டிவிக்கு கொடுத்த பேட்டியை உற்று கவனித்தீர்களானால் திரும்பத் திரும்ப ஒரு விஷயத்தை நான் கூறியது புலப்படும், அதாவது ஜெயலலிதா என்னைத் தான் வளர்ப்பு மகளாக கற்பனை உலகில் எண்ணியிருந்தார், எனக்கும் அவருக்குமான தொடர்பு கடைசிவரை இருந்தது, எட்டு வருடம் எங்கள் குடும்பத்தை ஒதுக்கி வைத்திருந்தார் என்று சொல்வது சும்மா, தினமும் பல் துலக்குவது போல தவறாமல் டெலிபதி முறையில் நானும் அத்தையும் அடிக்கடி கருத்துக்களை பரிமாறிக் கொள்வோம். நான் பலமுறை அவரை நேரில் சந்திக்கச் சென்ற பொழுதெல்லாம் அரசு அலுவலகத்தில் பொதுமக்கள் பைலை தூக்கிக் கொண்டு டேபிள் டேபிளாக அலையும் பொதுஜனம் போல அலைக்கழிக்கப்பட்டேன். அதனால் தானோ என்னவோ அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் தலைமைச்செயலகம் தவிர்த்து சின்னம்மாவை போயஸ் தோட்டத்தில் சென்று அலோசிக்கிறார்கள். எனது நிஜ அத்தை தான் என்னை வளர்ப்பு மகளாக அங்கீகரிக்காமல் இறைவனடி சேர்ந்து விட்டார், எனது சின்ன அத்தையான சின்னம்மா சசிகலா என்னை சின்ன மகளாக என்னை ஏற்றுக் கொண்டு சொத்தில் ஒரு பங்கு கொடுத்து விட்டால் நான் அதிமுக விவகாரத்தில் தலையிடாமல் முன்பிருந்தது போல இருந்த இடம் தெரியாமல் தலைமறைவாகி விடுவேன், பணம் தானே வாழ்க்கைக்கு முக்கியம், எதை என் சின்ன அத்தை செய்வார்களா.. செய்வார்களா..?” என்று ஜெயா ஸ்டைலில் விரலை உயர்த்திக் காட்டினார்.

பகிர்

There are no comments yet