சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு வருகை தந்தமைக்காக குடியரசுத் தலைவர் பிரணாப், பிரதமர் மோடி, காங். துணைத் தலைவர் ராகுல் ஆகியோருக்கு சின்னம்மா கடிதம் எழுதியுள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் ஆங்கிலம் தெரியாது என்று சொல்லி, குற்றப்பத்திரிகையை தமிழில் மொழிபெயர்த்து தரச் சொல்லி காலம் கடத்தியவர் சின்னம்மா, தற்போது இந்த நன்றியுரை கடித்தத்தை தெளிவான ஆங்கிலத்தில் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே காவிரிப் பிரச்சினை, மீனவர் பிரச்சினை குறித்த சலசலப்பு எழும்போதெல்லாம், மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடித அரசியல் நடத்துவது வழக்கம். அதையே பின்பற்றி சின்னம்மாவும் அம்மா பாணியில் கடித பணியை தொடர திட்டம் வைத்துள்ளார். இதற்கிடையே ஜெயலலிதா படத்தை சட்டைப்பையில் வைத்துக் கொண்டு வலம் வந்த அதிமுக நிர்வாகிகள் சிலர் தற்போது சின்னம்மா படத்துடன் உலா வரும் நிலையில், அடிமட்ட தொண்டர்கள் சிலர் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், தீபா படத்துடன் வலம் வருவது சின்னம்மா ஆதரவாளர்களை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது. தீபா கார்டின் மேல் எம்.ஜி.ஆர், ஜெ., படங்கள் சிறிய அளவிலும் தீபா படம் பெரிய அளவிலும் இடம் பெற்றதுடன், ‘அம்மாவின் ரத்தத்தின் ரத்தமே, அம்மாவின் மருமகளே, தமிழகத்தின் திருமகளே, ஜெ.தீபா அம்மாவே தலைமை ஏற்க வா’ என்ற வாசகம் உள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த சின்னம்மா சசிகலா, அவசரம் அவசரமாக தான் தலைமைச்செயலகமாக் கருதி நிர்வாகிகளை சந்திக்கும் ஜெயலலிதாவின் இல்லமான வேதா நிலையத்திற்கு வெளியே உள்ள பெட்டிக் கடையில் ஜெயலலிதா படம் பொறித்த பேனாக்களை மொத்தமாக வாங்கி நிர்வாகிகளுக்கு தற்காலிகமாக வழங்கி உள்ளதாக நமது கப்ஸா நிருபர் மோப்பம் பிடித்துள்ளார். அதுமட்டுமன்றி உபரி தகவலாக, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ’51 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை, மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது மற்றும் கடத்தப்படும் நிகழ்வுகள் நிறுத்தப்பட வேண்டும், பிடிக்கப்பட்ட 114 படகுகள் எந்தத் தாமதமும் இல்லாமல் மீட்கப்பட வேண்டும்’ என அவர் கொடுத்த பேனாவால் பிரதமருக்கு டிச. 21 புதன் கிழமை கடிதம் எழுதி சின்னம்மவின் இதய சிம்மாசனத்தில் இடம் பெற்றுவிட்டார் என்றும் கூறப்படுகிறது. மேலும் சின்னம்மா படம் பொறித்த விசிட்டிங் கார்டுகள், கீ செயின்கள், பேனாக்கள், மோதிரங்கள், போட்டோ பிரேம்கள் தயாரித்துக் கொண்டு வர சின்னம்மா ஆதரவாளர் படை சிவகாசி விரைந்துள்ளதாகவும், சின்னம்மா பொதுச்செயலாளர் பதவி ஏற்கும் வரை அம்மா பேனா அம்மா போட்டோக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது எனவும், பதவியேற்ற பிறகு கண்டிப்பாக சின்னம்மா படங்கள் மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்று கட்டளை இடப்பட்டிருப்பதாகவும் போயஸ் தோட்ட பட்சி ஒன்று கூறுகிறது.

பகிர்

There are no comments yet