சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நடிகை என்பதாலும் நடிகர் சங்கத்தின் நிரந்தர உறுப்பினராக இருந்தவர் என்பதாலும், திரையுலகினர் திரளாக அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். சென்னை பல்கலைக்கழகத்தில் இருந்து ஊர்வலமாக சென்ற திரை உலகினர் பொதுமக்களுக்கு அனுமதி இல்லாத சமாதிக்கு உள்ளே சென்று அஞ்சலி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சினிமா தயாரிப்பாளர் தாணு ‘சின்னம்மா கட்சிக்கு தலைமையேற்க வேண்டும், தமிழ் நாட்டை சின்னம்மா வழிநடத்த வேண்டும்’ என்று ‘சசிகலா துதி’ பாடியது சிலருக்கு தொண்டர்களுக்கு எரிச்சல் மூட்டியது அப்பட்டமாக தெரிந்தது. அஞ்சலி செலுத்தவேண்டிய இடத்தில், எதற்கோ அச்சாரம் போடுகிறாரே என்ற சந்தேகம் நமது கப்ஸா நிருபருக்கு எழுந்தது. கப்ஸா நிருபரின் கிடுக்கிப்பிடி கேள்விகளுக்கு வேறு வழியின்றி பதிலளித்த தாணு கூறியதாவது:

“தமிழ் ரசிகனை ஏமாற்றி மலேசிய மக்கள் பிரச்சினையை வைத்து ‘கபாலி’ படம் எடுத்து காசு பார்த்தேன். தியேட்டரில் 120 ரூபாய் விற்க வேண்டிய டிக்கட்டை 1000 ரூபாய் வரை விற்று ஒரு பெரும் தொகை வைத்திருந்தேன். சொந்தமாக ரிலீஸ் செய்திருந்தால் சற்று பெரும் தொகை கிடைத்திருக்கும், ஆனால் அதிமுக விற்கு சொந்தமான ஜாஸ் சினிமாஸ் என் பட உரிமையை வாங்கி அவர்கள் பங்குக்கு ஒரு பகுதியை கபளீகரம் செய்து கொண்டனர். மொத்த கலக்ஷன் குறித்து கணக்கு கேட்ட ரஜினிக்கு கூட டிமிக்கி கொடுத்து கொழித்து வைத்திருந்த பெருந்தொகை, மோடியின் ‘செல்லாது’ அறிவிப்பால் பழைய 1000 500 நோட்டுகளாக ‘பல்லிளித்துக்’ கொண்டு பெட்டியில் தூங்குகிறது. அதை சினிமாவில் ‘டம்மி’ பணக்கட்டாகத்தான் இனி பயன்படுத்த முடியும். எனவேதான் சின்னம்மாவிற்கு நமஸ்காரம் வைத்து, இனி வெளிவரும் கலைப்புலி கிரியஷன்ஸ் பட டிக்கட்களை ஆன்லைனில் வாங்குபவர்கள் நீங்கலாக தியேட்டர்களில் 2000 ரூ. நோட்டு கொடுப்பவர்களுக்கு மட்டுமே வழங்க அரசாணை வெளியிடுமாறு கேட்டுக் கொள்ளலாம் என இருக்கிறேன், அதற்காக எனது அடுத்த படத்தில் அவரை ‘சொர்ணாக்கா’ டைப்பில் ஒரு வேடத்தில் நடிக்க வைக்க டைரக்டர்களிடம் பேசி வருகிறேன்” என்றார்.

பகிர்

There are no comments yet