சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகும் போயஸ் தோட்ட இல்லத்தில், காவல் துறை சி.ஐ.டி ஒருவரும், 4 கூடுதல் கண்காணிப்பாளர்கள், 4 துணைக் கண்காணிப்பாளர்கள், 7 ஆய்வாளர்கள் என 240 காவலர்கள் மூன்று ஷிப்டுகளில் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் உள்ளனர். இவர்களில் பலரும் டபுள் ஷிப்ட் பார்ப்பதாக புலம்புகின்றனர். தற்போது போயஸ் தோட்ட வேதா இல்லத்தில், அரசியல் சட்ட ரீதியிலான அதிகாரம் படைத்தவரோ, மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட உயர் பாதுகாப்பு பிரிவை சேர்ந்தவர்களோ இல்லை. அங்கே இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான காவல் துறையினர் நியமிக்கப்பட்டிருப்பது முறையான செயல் இல்லை, காவல் துறையைச் சீரழிக்கும் இத்தகைய அத்துமீறல் உடனடியாக தடுத்து நிறுத்தப்படா விட்டால் திமுக சார்பில் சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்டாலின் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

இது குறித்து நமது கப்ஸா நிருபர் திமுக தொண்டர் ஒருவரிடம் விசாரித்ததில், தனியார் செக்யூரிட்டிகள் பற்றாக்குறையால் கருணாநிதியைப் பார்க்க வரும் தொண்டர்களை கோபாலபுரம் பகுதியில் கட்டுப்படுத்த முடியவில்லை, கருணாநிதிக்கு நோய்த் தொற்று ஏற்படும் என்று எவ்வளவோ எடுத்து சொல்லியும் தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர், அந்த வெறுப்பில் தான் ஸ்டாலின் இப்படிக் கூறியதாகத் தெரிகிறது. இந்த சந்தேகத்தை உடனடியாக தீர்த்துவிட கான்ஸ்டபிள் வேடமணிந்து கடும் காவல் பணியில் இருக்கும் உயர் போலீஸ் அதிகாரிகள் கண்ணில் மண்ணை தூவி விட்டு சின்னம்மாவிடம் கப்ஸா நிருபர் எடுத்த பேட்டி: அக்கா (ஜெயலலிதா) மறைந்தாலும், அவர் அப்பல்லோவில் இருந்த 75 நாள் சிகிச்சை விபரங்களை நாங்கள் மறைத்தாலும், இன்னும் ஆவியாக வேதா இல்லத்தில் குடிகொண்டுள்ளார். மருத்துவமனையில் டெலிபதி முறையில் தேர்தல் வேலைகளை செய்ய சொன்ன அக்கா, மறைந்த பின்பு எங்கள் கனவில் வந்து ‘ஆவி மீடியேட்டர்கள்’ உதவியுடன் பேசி கட்டளைகள் இட்டு வருகிறார், அவர் திரும்ப திரும்ப சொல்லும் விஷயம் நான் பொதுச்செயலாளர் ஆக வேண்டும் என்பதுதான். அதையே அனைத்து அதிமுக நிர்வாகிகளையும் மீடியாவிடம் சொல்ல அம்மா ஆவியுடன் பேசி நான் தான் கட்டளையிட்டுள்ளேன்.

அக்கா இருக்கும் போதே எந்த தகவல் என்றாலும் இந்த சின்னம்மா மூலமாகத்தான் போகும். அம்மாவை நேரடியாகப் பார்க்க முடியாது. தீபாவிடம் கேட்டுப்பாருங்கள். ஆட்சியோ, கட்சியோ இந்த சின்னம்மாவின் நேரடி கண்காணிப்பு இருந்தது. முதல்வர் எடுக்க வேண்டிய முடிவுகளை பதவியே இல்லாத ஒருவர் எடுப்பதை ஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை, காவல் அம்மாவின் ஆவிக்குத்தான், எனக்கல்ல, அது தவறு என்றால் ஆண்டவன் தண்டனை கொடுக்காவிட்டலும் அக்கா தண்டனை கொடுக்க மாட்டார்களா? என்பதை சம்பந்தப்பட்டவர்கள் யோசிக்க மாட்டார்களா? என்று பொரிந்து தள்ளினார்.

பகிர்

There are no comments yet