சென்னை: ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அவரது தோழியான சசிகலா பொதுச்செயலாளர் ஆக வேண்டும் என அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சசிகலாவை ஆதரித்து பல இடங்களில் போஸ்டர்களும் தட்டிகளும் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் சசிகலாவை எதிர்ப்பவர்கள் அந்த போஸ்டர்களில் சாணி அடிப்பதும், அதை கிழித்து எறியும் காட்சிகளும் அரங்கேறி வருகிறது. காவல் துறையும் சளைக்காமல் சாணி அடிப்புகளை கழுவி வருகின்றனர். சிலர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை அதரித்து, அண்ணா, எம்.ஜி.ஆர் படத்துடன் ஜெயலலிதா, தீபா படத்தை இணைத்து கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி வருகின்றனர். ஜெ தீபா என்ற பேரவையும் சேலம் 44 வார்டில் துவங்கி உள்ளனர்.

இந்த நிலையில் ஜெயலலிதாவை மையப்படுத்தி அவருக்கு மக்கள் அன்புடன் வழங்கிய ‘அம்மா’ என்ற சொல்லை முன்வைத்து ‘அம்மா திமுக’ என்ற புதிய கட்சி உதயமாகி உள்ளது. தந்தை பெரியாரின் சகோதரர் ஈ.வி.கே சம்பத்தின் மகன் இனியன் சம்பத் இந்த கட்சியை துவங்கி உள்ளார். “அம்மா திமுக” என்ற பெயரை சுருக்கமாக எழுதும்போது, அதிமுக என்றே எழுத முடியும் என்பதால், இது தமிழக அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே முதல்வர் ஓ.பி.எஸ். பாஜக ஆதரவுடன் பொதுச்செயலாளராக பதவி ஏற்க காய் நகர்த்துவதாக செய்திகள் உலாவருகின்றன.

ஓ.பி.எஸ் மற்றும் தீபாவால் தனது முப்பது வருட கனவில் மண் விழுந்து விடுமோ என்று சின்னம்மா கலக்கத்தில் உள்ளாராம். போதாக் குறைக்கு இனியன் சம்பத் வேறு ‘அம்மா திமுக’ ஆரம்பித்து சின்ன அம்மாவுக்கு ‘இனிமா’ கொடுத்து இருப்பதால் மேலும் கலங்கி போயுள்ளார். ஏற்கனவே தந்தி டிவியில் ஒளிபரப்பாகவிருந்த தீபா பேட்டியை நிறுத்தி வைத்து, பின்னர் எடிட் செய்து சின்னம்மா ஆதரவாளர்கள் வெளியிட்டார்கள். இந்த நிலையில் தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் சூழல் குறித்து உண்மை நிலையை கண்டறிய போயஸ் தொட்டம் சென்ற நமது கப்ஸா நிருபரிடம் அளித்த பேட்டி: குழம்பிய குட்டையில் தான் மீன் பிடிக்க முடியும், ஏற்கனவே மக்களை அதிமுகவில் இரண்டு சசிகலாக்கள் ஒண்ணு அம்மா ‘அரவணைத்த’ நான், இன்ணொண்ணு அம்மா ‘அறைகொடுத்த’ சசிகலா புஷ்பா.. இரண்டு ‘ரெட்டி’கள் எங்களுக்கு ரகசியமாக செயல்பட்ட அப்பல்லோ ரெட்டி, தலைமைச் செயலர் ராமமோகன் ராவை மாட்டி விட்ட சேகர் ரெட்டி, என்னிடம் உள்ள செல்வாக்கை பயன்படுத்தி ‘அம்மா திமுக’ வுக்கு போட்டியாக ‘அக்கா திமுக’ ஆரம்பித்து தமிழகத்தில் மொத்தம் மூன்று ‘அதிமுக’ களை உருவாக்கி மக்களை குழப்பி பொதுச்செயலாளர் நாற்காலியை அலங்கரிக்காமல் விடமாட்டேன் இந்த சின்ன அம்மா…! என்று கோபாவேசமாக முறைத்துக் காட்டினார்.

பகிர்

There are no comments yet