சென்னை: மறுமலர்ச்சி திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவை இணைந்து முதலில் மக்கள் நலக் கூட்டியக்கம் உருவாக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சட்டசபை தேர்தலின் போது இந்த கூட்டியக்கம் மக்கள் நலக் கூட்டணியாக உருவெடுத்தது. இக்கூட்டணியுடன் தேமுதிக, தமாகா ஆகியவையும் கை கோர்த்தன. ஆனால் தேர்தலில் இந்த அணி படுதோல்வியைச் சந்தித்தது. இதன் பின்னர் மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் தனித்தனியே நிலைப்பாட்டை மேற்கொள்ள தொடங்கின. இதனால் மக்கள் நலக் கூட்டணியின் எதிர்காலம் குறித்து கேள்வி எழுந்தது. இந்த நிலையில் சென்னையில் இன்று மக்கள் நலக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக மதிமுக அறிவித்துள்ளது.

சென்னையில் மதிமுகவின் உயர்நிலைக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது: மதிமுக உயர்நிலைக் குழுக் கூட்டம் அண்ணாநகரில் எனது இல்லத்தில் நடைபெற்றது. உயர்நிலைக் குழு உறுப்பினர்கள் அனைவருமே கலந்து கொண்டனர். நீண்டநேரம் கருத்துகள் பரிமாறப்பட்டன. மக்கள் நலக் கூட்டு இயக்கத்தில் இருந்து மதிமுக விலகிக் கொள்கிறது சிபிஐ, சிபிஎம், விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் தோழமையும் நட்பும் தொடரும் என்று கூறினார்.

எப்போதும் தன் எண்ணிலும், பேச்சிலும் தமிழர் நலனை உயிராக நினைக்கும் வைகோவின் இந்த முடிவிற்கு வேறு பல தமிழர் நல காரணங்கள் இருக்கலாம் என்று யூகித்த நமது கப்ஸா நிருபர் வைகோவை ரகசியமாக சந்தித்த போது அவர் கூறியதாவது: என் அன்புச்சகோதரி அம்மா ஜெயலலிதா இறந்த பிறகு, காங்கிரசுக்கு காவடி தூக்கும் திருமா சந்தர்ப்பவாதிகளும், மோடி போன்ற மதவாதிகளும், ஸ்டாலின் போன்ற தலைக்கனம் பிடித்த தருக்கர்களும் தலையெடுத்து விட்டார்கள். ஆயிரம் வேலு நாச்சியார்களை ஒரே உருவாக்க கொண்ட சின்னாம்மாவுக்கு மோடி ரெய்டுகள் பல கொடுத்து நெருக்கடி கொடுக்கிறார்.

ரெட்டியும், ராவும் எனது மணவாடுகள் தான், அவர்களுக்கு துயரம் என்றால் எனது ரத்தம் துடிக்கிறது. ஆனால் அடக்கு அடக்கு என்று கம்யூனிஸ்ட்கள் என்னை அடக்கி விட்டனர். அதனால் தான் இப்போது ம.ந.கூ வில் இருந்து வெளியேறி, சின்னாம்மா கட்டளையின் பேரில் பா.ஜ.க விற்கு ஆதரவு அளித்து மோடியின் கரத்தை வலுப்படுத்த போகிறேன். இதுதான் சின்னம்மா எனக்கு கொடுத்த அடுத்த அஸைன்மென்ட். இப்போதைய தமிழக அரசியலில் நான் எல்லோருக்கும் எதிரியாகி விட்டேன், ஆனால் அனைவரும் எனக்கு நண்பர்கள், இது அவர்களுக்கே தெரியும். தேவை வரும்போது அவர்களுடன் நான் மீண்டும் கூட்டணி வைக்க தயங்க மாட்டேன். இந்த பிரிவு தாற்காலிகமானதுதான் என்று வருத்தத்துடன் கூறினார்.

பகிர்

There are no comments yet