சென்னை: சி.எம்.டி.ஏ மற்றும் மாநகராட்சி அனுமதி பெற்ற பின்னர் தான் புதிய கட்டிடம் கட்டப்பட வேண்டும். ஆனால் அனுமதி இல்லாமல் கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. அதுமட்டுமன்றி ஆக்கிரமிப்பு கட்டிடம் கட்டுவோருக்கு துணையாக மின்வாரியம், மின் இணைப்பு கொடுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. முறையான ஆவணம் இல்லாமல், லஞ்சம் பெற்றுக்கொண்டு மின் இணைப்பு வழங்கப்படுவதாக் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். விதிமீறி கட்டிடம் கட்டுவோர் மீதும் நேர்மைக்குப் புறம்பாக மின் இணைப்பு கொடுத்த மின்வாரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கூடுதலாக தெரிவித்துள்ளார்.
மதுரை மேல ஆவணி மூல வீதியில் விதியை மீறி உள்ள 3 அடுக்கு தேமுதிக கட்சி அலுவலகக் கட்டிடத்தை இடிக்குமாறு மதுரை மாநகராட்சி அக்கட்சியின் தலைவர் விஜயகாந்துக்கு ஏப்ரல் 2012ஆம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சில வருடம் முன்பு வடபழனி பாலம் கட்டுகிறோம் என்று சென்னை தேமுதிக அலுவலகத்தை இடிக்க பார்த்தார்கள், ஆனால் நூலிழையில் தப்பியது. இருந்தபோதும் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலத்தின் ஒரு பகுதி மேம்பால பணிக்காக முன்னர் கையகப்படுத்தப்பட்டது. இதற்கு காரணமே திமுகதான் என இன்னமும் பொங்கிக் கொண்டிருக்கிறது விஜயகாந்த் குடும்பம். இதனிடையே ஜோசியத்தில் அதீத நம்பிக்கைக் கொண்ட அவர், தலைமை அலுவலகத்தை மாற்ற வேண்டும் என்ற ஜோதிடர்களின் ஆலோசனையை ஏற்றுக் கொண்டுவிட்டாராம். இதனால் கோயம்பேட்டில் இருந்து தேமுதிக தலைமை அலுவலகத்தை மாற்றுவதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. தற்போதைய தேமுதிக தலைமை அலுவலகம் இருக்கும் இடத்தில் மெகா மால் ஒன்றை கட்டுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாம்.. இதற்காக ஆந்திரா நிறுவனம் ஒன்றுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து கண்ணீர்மல்க நமது கப்ஸா நிருபரிடம் மேலும் கேப்டன் கூறியதாவது: எனது அரசியல் படத்துக்கு வித்திட்ட ‘ரமணா’ படத்தில் விதி மீறி கட்டப்பட்ட அபார்ட்மெண்டில் விபத்தில் என் குடும்பம் நாசமாவது போல் காட்சி அமைத்து, திமுக வை சாடினேன். நரசிம்மா படத்தில் என் வாயில் கரண்ட் ஷாக் வைப்பார்கள், “என்னை தொட்டா கரண்டுக்கே ஷாக் அடிக்கும்” என்று மின் வாரியத்தின் காலை வாரினேன். அதை அந்த இரண்டு அரசுத் துறைகளும் மனதில் வைத்துக் கொண்டு என் அலுவலகங்களை இடிக்கப் பார்க்கிறார்கள். என் மெகா மாலுக்கும் பிளான் சாங்க்ஷன் தராமல் இழுத்தடிக்கிறார்கள். தயவு செய்து என் அலுவலகங்களை தவிர்த்து ஆக்கிரமிப்புகளை இடியுங்கள், கட்சியிலும் நிம்மதி இல்லை, வீட்டிலும் நிம்மதி இல்லை டாஸ்மாக் சரக்கு மட்டும் தான் என் மனக்கவலையை போக்கிக் கொண்டிருக்கிறது, அதையும் சின்னம்மா முதல்வராகி மது ஒழிப்பு கோப்பில் கையெழுத்திடப் போவதாக பேசிக் கொள்கிறார்கள். டாஸ்மாக்கை மூடி விடாதீர்கள் என்று கண்ணீர் சிந்தினார்
There are no comments yet
Or use one of these social networks