சென்னை: ‘தல 57’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தில் சிறுத்தை சிவா இயக்கத்தில் பல்கேரியாவில் ஷூட்டிங்கில் இருந்த அஜித் மற்றும் படக்குழு புத்தாண்டை கொண்டாட சென்னை வந்துள்ளனர். இந்தப்படத்தில் அஜித் பைக்கில் வீலிங் செய்வது போன்ற காட்சி வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் சென்னை பெருமாநகர காவல் துறை புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வரையில் பல்வேறு கட்டுப்படுகளை விதித்துள்ளது. அதன்படி இரவு 1 மணிவரை மட்டுமே மது விற்க அனுமதி, இரு சக்கர வாகனங்களில் செல்லும் இளைஞர் சாகசங்கள் செய்யக்கூடாது. வாழ்த்து கூறும் பெயரில் பெண்களிடம் சில்மிஷம் செய்யக்கூடாது என்றும் காவல் துறை எச்சரித்து உள்ளது.

இதை கேட்டு பைக் கார் ரேசிங்கிற்கு பெயர் போன தல அஜித் மிகவும் வருத்தத்தில் இருப்பதாக தெரிகிறது. பள்ளிப்படிப்பை பாதியிலேயே விட்ட அஜித் பைக் மெக்கானிக்காக வேலை பார்த்தார். பைக், கார் மீது ஏற்பட்ட தீராக் காதலால் பைக் ரேஸ்களில் கலந்துகொண்டார். ரேஸில் கலந்துகொள்ள போதிய பணம் இல்லாததால் சின்னச் சின்ன விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்தார். பின்னர் பணம் சேர்த்து கார் ரேஸில் கடும் பயிற்சியால் ஃபார்முலா 2 பந்தயத்தில் கௌரவமான இடத்தைப் பிடித்தார். 30 வயதைக் கடந்த பிறகு சிறுவயதைக் கனவை நிறைவேற்றிக்கொண்டவர்.

இது குறித்து அஜித் நமது கப்ஸா நிருபரிடம் கூறியதாவது: “தல 57 படத்தில் எனது சண்டை காட்சிகளுக்கு டூப் போட்ட பல்கேரிய பைக் ரேசரும், ஸ்டண்ட் கலைஞருமான ஜோரியன் பொனமரெப் என்னை பற்றி புகழ்ந்து தனது பேஸ்புக் வலைத்தளத்தில் பைக் வீலிங் செய்தபோது எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் இருப்பது நான் அல்ல அவர்தான். போட்டோ எடுத்துக் கொடுத்தது நான் தான். ஏமாளி ரசிகன் நான் தான் பைக் வீலிங் செய்வதாக நம்பி புதிய 2000 நோட்டுக்களாக பணத்தை கொட்டுவான். டூப் போடுவதற்கு வசதியாக என்னைப் போன்ற நடிகர்கள் ஹெல்மெட் அணிவது போல வெட்டிப் பசங்க புத்தாண்டு கொண்டாட தன் அப்பா அம்மா வாங்கிக் கொடுத்த பைக்கில் ஹெல்மெட் அணிந்து வீலிங் ரேசிங் செய்து கொண்டாட காவல் துறை அனுமதி அளிக்க வேண்டும். டாஸ்மாக் ஆற்றையும் விடிய விடிய ஓட விட சட்டபூர்வமாக புத்தாண்டு தினத்தன்று அனுமதிக்க வேண்டும், இதற்காக சின்னம்மாவை சந்தித்து பேசுவேன். இதன் மூலம் டாஸ்மாக் வருமானமும் புத்தூர் கட்டு மற்றும் ஆர்தோ டாக்டர்களும் கல்லாக்களும் நிரம்பும்.” என்று தனக்கு வராத காமெடி சிரிப்பு சிரித்தார்.

பகிர்

There are no comments yet