மதுரை : “இந்தியாவைப்பற்றி பேசும்போது, இந்தியா கலாசாரத்தில் சிறந்தது, பண்பாட்டில் சிறந்தது என எல்லோரும் பெருமையாக சொல்கிறார்கள். என்னைப்பொறுத்தவரை இந்தியா ஒரு வெட்கம் கெட்ட நாடு என்றுதான் சொல்வேன்,” என இயக்குநர் பா.இரஞ்சித் பேசியுள்ளார்.

என்னடா இது இந்தியாவின் பண்பாட்டுக்கு வந்த சோதனை என்று எண்ணிய நமது கப்ஸா நிருபர் ரஞ்சித்தை தனிமையில் மடக்கி எடுத்த ரகசிய பேட்டியில் ரஞ்சித் தமது உள்ளக் கிடைக்கையை கொட்டினார், இதோ அவரின் பேட்டி: கப்ஸா சார், இது நாகரிகற்ற நாடு. மனிதனை மனிதனாக பார்க்காத நாடு. 60-வயது ரஜினியை ஹீரோவாகி, 20 வயது பெண்களுடன் கொஞ்சி டூயட் பாட வைக்கும் நாடு. இங்கு சமூக நீதியை எதிர்பார்த்தால் எப்படி கிடைக்கும்? பணம் தானே நம்மை இழிவான வேலையை செய்யச் சொல்கிறது. இந்த வருடத்தில் மட்டும்எத்தனை பேர் 1000, 2000 ரூபாய் கொடுத்து கபாலி படம் பார்த்தார்கள். அதில் எத்தனை வீட்டு அடுப்பு அணைந்து போனது, பல குடும்பங்களின் கனவுகள் அழிந்து போனது. இந்த நிலை தொடர வேண்டுமா?

இந்த ரஜினியை பற்றி பேச ஊடகங்கள் கூட மவுனம் சாதிக்கிறது. 40-வயதுக்கு மேல் உள்ளவர்களை ஹீரோவாக நடிக்க முடியாது என்று சட்டம் இயற்றி அமல்படுத்த அரசு மறுக்கிறது. இதைப்பற்றி நாம்தான் பேசுகிறோம். வேறு யாராவது பேசுகிறார்களா? மற்ற இளம் ஹீரோக்கள் யாராவது இதைப்பற்றி பேசினார்களா? இதை யாரும் பேச மாட்டார்கள், ஏன் என்றால் ரஜினி மீது அனைவருக்கும் பயம்.

நாங்கள் பணத்துக்கும், ஒரு ஜான் வயிற்றுக்கும் இந்த வேலையைச் செய்கிறோம். இந்த வேலையை செய்து சாவதை விட, சாப்பிடாமல் செத்துப்போகலாம். ஆம், இந்த வேலையை செய்ய மாட்டோமென்று இயக்குனர்கள் எல்லோரும் ஒருநாள் இருந்து பாருங்கள். அப்போதுதான் இதுக்கு முடிவு வரும். இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இப்படியே அறிவற்றவர்களாக அடிமைகளாக இருக்கப் போகிறீர்கள். இங்கு நீதியை எதிர்பார்க்காதீர்கள். இந்த நாடு ரஜினி போன்றோரை தெய்வமாக்கி மனிதனை அடிமையாக நினைக்கும் நாடு. இங்கு நீதி கிடைக்காது. நாம் சுய உணர்வுள்ளவர்களாக மாற வேண்டும். நீங்க இந்த வேலையை மறுக்க ஏன் அஞ்சுகிறீர்கள், அடிப்பார்கள் என்றா? அடித்தாலும் பரவாயில்லை. அடி வாங்குங்கள் ஆனால், ரஜினியையே ஹீரோவாக சித்தரிக்கும் இந்த வேலையை மட்டும் செய்யாதீர்கள்.

அதுபோல் நம்மீதான இழிவுகளை களைய நாம்தான் முடிவெடுக்க வேண்டும். அடுத்த தலைமுறைக்கு இந்த வேலையை விட்டுச் செல்ல வேண்டாம். இவை இன்றோடு போகட்டும். மகிழ்ச்சி”. என்றார். இதைக் கேட்ட நமது கப்ஸா நிருபருக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை, அடடே ரஜினியிடம் வேலை பார்த்து, ரஜினியைப்பற்றி நன்கு தெரிந்து வைத்துள்ளார் என்று எண்ணி இடத்தை காலி செய்தார்.

There are no comments yet