சென்னை: கட்சியும், ஆட்சியும் உங்களோடு; மக்களும், தொண்டர்களும் எங்களோடு’ என்ற கோஷத்துடன், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின், அண்ணன் மகள் தீபா, மதிமுக தலைவர் வைகோவுடன் இணைந்து நீதி கேட்டு நெடும் பயணம் செல்ல திட்டமிட்டுள்ளார் என்று ‘தீபாவை அம்மா ஆக்குவோம்’ அமைப்பின் பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்..

சென்னையில், நேற்று முன்தினம் நடந்த, அ.தி.மு.க., பொதுக்குழுவில், ‘சசிகலா தலைமை ஏற்க வேண்டும்’ என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதையடுத்து, எதிர்பார்த்தபடியே, சசிகலா, பொதுச்செயலராகி உள்ளார். எனினும், தனி அதிகாரியை நியமித்து, முறைப்படி தேர்தல் நடத்த, அ.தி.மு.க., திட்டமிட்டுள்ளது. கட்சி விதிப்படி, பொதுச்செயலரை, அதன், 1.54 கோடி தொண்டர்கள் தேர்வு செய்ய வேண்டும். தற்போது, எம்.எல்.ஏ., – எம்.பி.,க்கள், மாவட்ட செயலர்கள், ஒன்றிய செயலர்கள், பேரவை மாவட்ட செயலர்கள்; நகர செயலர்கள்; பொதுக்குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் என, 1,500 பேர் தான், சசிகலா பொதுச்செயலராக, விருப்ப மனுவில் கையெழுத்திட்டு உள்ளனர்.கட்சியில் உள்ள, 75 சதவீத தொண்டர்களின் விருப்பத்தின் அடிப்படையில், பொதுச்செயலரை நியமிக்கவில்லை என்பது, தீபாவின் ஆதரவாளர்கள் கருத்து. சசிகலாவை பொதுச்செயலராக தேர்வு செய்ய, பொது மக்கள், தொண்டர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதால், அதை, தீபாவுக்கு சாதகமாக்க, அவரது ஆதரவாளர்கள் விரும்புகின்றனர்.

இதுகுறித்து, தீபா ஆதரவாளர்கள் நமது கப்ஸா நிருபரிடம் கூறியதாவது: சசிகலாவிடம், கட்சிக்கு சொந்தமான தலைமை அலுவலகம், கொடி, சின்னம் மற்றும் ஆட்சியும் இருக்கலாம்; மக்களும், தொண்டர்களும், தீபாவுக்கு ஆதரவாகவே உள்ளனர். எனவே, மாவட்ட வாரியாக, மக்களிடமும், தொண்டர்களிடமும், நீதி கேட்டு பயணம் செல்ல, தீபா திட்டமிட்டுள்ளார். நடைபயணம் செல்வதில் மிக்க அனுபவம் உடைய மதிமுக தலைவர் வைகோவை சந்தித்து, அதற்கான வழிமுறைகளை கேட்பதோடு, துணைக்கு வைகோவையும் அழைத்து செல்ல இருப்பதாக தெரிகிறது.

‘தை பிறந்தால், வழி பிறக்கும்’ என்பதை போல, பொங்கலுக்கு பின், நிராயுதபாணியாக நிற்கும், அ.தி.மு.க., தொண்டர்களுக்கு வழிகாட்டும் வகையில், தீபாவின் சுற்றுப்பயணம் அமையும். அதன்மூலம் மக்களிடம் கிடைக்கும் ஆதரவு, செல்வாக்கு, அனுதாபத்தை தொடர்ந்து, புதுக் கட்சி துவக்க உள்ளார். பின், சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு டெபாசிட் இழக்கும் திட்டத்தை வைத்துள்ளார் என்று அவர்கள் கூறினர்.

There are no comments yet