சென்னை: அ.தி.மு.க பொதுச் செயலாளராக பதவியேற்ற பிறகு, சசிகலா நிகழ்த்திய கன்னிப்பேச்சு ஆச்சரியத்தோடு அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது. பொதுக்குழுவில் பேச வேண்டிய பேச்சை, தலைமைக் கழகத்தில் பேசினார். அவரது பேச்சு இந்தளவுக்கு வெற்றி பெறுவதற்குக் காரணமே ம.நடராசன்தான்’ என்கின்றனர் கார்டன் வட்டாரத்தில். தொண்டர்கள் மத்தியில் அம்மா இல்லாத குறையைப் போக்கும் வகையில் பேசுவது என முடிவு செய்யப்பட்ட பிறகு, பேச்சுக்கான குறிப்புகளை தயாரிக்கும் பணிகள் துவங்கின. நடராசன் வழிகாட்ட மூன்று பேர் கொண்ட குழுதான் பேச்சுக்கான உரையைத் தயாரித்தது. எம்.ஜி.ஆர் உருவாக்கிய கழகத்தை ஜெயலலிதா எப்படிக் கட்டிக் காப்பாற்றினார் என்பதில் தொடங்கி, என்ன செய்யப் போகிறோம் என்பது வரையில் குறிப்புகள் தயாரானது. இதன்பின்னர், கார்டனில் ஓர் அறையில் சிறிய மைக் ஒன்றை அமைத்து, பேசிப் பார்த்தார். பேச்சின் ஏற்ற இறக்கங்களை சசிகலாவின் அக்கா மகன் டி.டி.வி.தினகரன் சொல்லிக் கொடுத்தார். எந்த இடத்தில் எந்த மாதிரிப் பேச வேண்டும் என்பதை விளக்கினார். இதில் திருப்தியடைந்த பிறகு, உடை விஷயத்தில் கவனம் செலுத்தினார். கட்சித் தலைவர் என்ற தோற்றத்தைக் கொண்டு வருவதற்காக, கறுப்பு கலர் வாட்ச், தேர்ந்த உடை என ஒவ்வொன்றும் பார்த்துப் பார்த்து தேர்வு செய்தார் தினகரனின் மனைவி அனுராதா. திட்டமிட்டபடியே பொதுச் செயலாளராக உருவாகிவிட்டார் சசிகலா. இந்த உரையில் மிஸ்ஸான ஒரே விஷயம், ஜெயலலிதாவைப் போலச் சொல்வதற்கு ஒரு குட்டிக் கதையைத் தயாரித்து வைத்திருந்தார். கடைசி நேரத்தில் கதைக்கு கத்திரி போட்டுவிட்டார்கள் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் நமது கப்ஸா நிருபர் அளித்த தகவல் படி, “கான மயிலாட கண்டிருந்த வாங்கோழி” என்ற பாடலுக்கற்ப, கார்டனில் சின்னம்மா பேசிப் பழகிய போது மேடை பயத்தை போக்க சினிமா ஆர்ட் டைரக்டர் ஒருவரை வைத்து செட் போடப்பட்டதாகவும், அப்பல்லோவில் ட்ராக்கியஸ்டமி சிகிச்சையில் பேச முடியாமல் இருந்த ஜெயலலிதா ‘அம்மா ஸ்பீக்கர் உதவியுடன் பேசுகிறார்’ என்று அங்கிருந்தவர்களால் கூறப்பட்டபோது உபயோகப்படுத்தப் பட்ட மைக்கையும் , ஸ்பீக்கரையும் பயன்படுத்தி சின்னம்மா பேச்சு பயிற்சி எடுத்ததாக தெரிகிறது. அப்பல்லோ சிகிச்சை செலவு 90 கோடி ரூபாய் பில்லை செட்டில் செய்தபோது பார்மசியில் அந்த மைக்கை ‘ரிடர்ன்’ வாங்கிக் கொள்ளாத்தாலும், சின்னம்மாவுக்கு பேச்சு பயிற்சிக்கு தோதாக ‘சின்னமாக’ இருந்ததாலும் பேச்சுப் பயிற்சிக்கு பெரும் உதவியாக இருந்ததாம். அதுபோல சினிமா மற்றும் விளம்பரங்களில் நடிகைகளுக்கு புடவை கட்டி விடும் காஸ்டியூமர் பெண்களும் சின்னம்மாவுக்கு ‘சிக்’ என்று புடவை கட்டி விட்டதாகவும் கட்சித் தலை’மை’ ஏற்றதால் தலைக்கு மை அடித்ததாவும் தெரிகிறது. பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டிக்கு வந்த தீபா அச்சு அசல் ஜெயலலிதா போலவே இருப்பதால் கலங்கிப் போயுள்ள சின்னம்மா கண்டதையும் சாப்பிட்டு ‘வெயிட்’ போட இருப்பதாகவும் தேவைப்பட்டால் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து முகத்தை ஜெயலலிதா போல் மாற்றி அமைக்கவும் எண்ணியுள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பகிர்

There are no comments yet