சென்னை: கடந்த நவம்பர் 8ல் செல்லாது அறிவிப்பை மோடி வெளியிட்டதும், பொது நிகழ்வுகள் குறித்து பேசாத ரஜினி, முதல் ஆளாக முந்திக் கொண்டு ‘புதிய இந்தியா பிறந்துள்ளது’ என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார், அதற்கு காரணம் ‘செல்லாது அறிவிப்பு’ ரஜினி போன்ற வி.ஐ.பி.க்களுக்கும், பாஜக பிரமுகர்களுக்கும் முன்பே தெரிவிக்கப்பட்டுவிட்டது தான் என்ற சர்ச்சை எழுந்தது. காங்கிரஸ் தரப்பில் ராகுல் கடும் தாக்குகளை முன்வைத்தார். வாய் பேசாத மௌனியாக பாராளுமன்றத்தை புறக்கணித்தார் மோடி. இதற்கிடையில் 50 நாட்களில் பணத்தட்டுப்பாடு நீங்காவிட்டால் “என்னை உயிரோடு கொளுத்துங்கள்” என்று கூறி சமாளித்தார் மோடி. அதனை தொடர்ந்து 50 நாட்கள் முடிந்த நிலையில் பிரதமர் மோடி ஜனவரி 1 2017 அன்று மீண்டும் தொலைக்காட்சிப் பேட்டியில் தோன்றி தன்னிலை விளக்கமளித்தார். ‘உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் ஒழிப்பு நடவடிக்கையால் மக்களுக்கு அசவுகரியம் ஏற்பட்டு இருப்பதை நான் அறிவேன், ஆனால் 125 கோடி மக்களும் நேர்மையாகவும் உண்மையாகவும் தனது அரசின் ஆதரவு அளித்து வருவதாகவும் புளகாங்கிதம் அடைந்தார். சில கண்துடைப்பு சலுகைகளையும் அறிவித்தார்.

நமது கப்ஸா நிருபரும் அவரது சில புருடா நண்பர்களும் ரஜினி இந்த முறை என்ன சொல்லப் போகிறார் என்று காத்திருந்து, ரஜினிக்கு தொண்டையில் “கிச் கிச்” இருந்ததால் உடனடியாக வாய்ஸ் கொடுக்க முடியவில்லை என்று தகவல் தெரிவித்தனர். மறுநாள் ரஜினி நமது கப்ஸா நிருபருக்கு பேட்டி அளித்ததன் விபரம் வருமாறு: “எனது படம் எந்திரன் பார்ட் டூ ரிலீஸ் ஆக தயாராகி விட்டது வழக்கம்போல் அதனால் தான் பேட்டி கொடுக்க கூப்பிட்டனுப்பினேன். மோடி எனது நீண்ட கால நண்பர். நான் பேசிய வசனம் ‘சொன்னதை செய்வேன் செய்வதையே சொல்வேன்’ என்பது, மோடிக்கு மிகவும் பிடித்த வசனம். அவரும் அப்படிப்பட்ட மனிதர் தான். பெட்ரோல் வாங்கத்தான் போனார் ஆனால் திடீரென புத்தாண்டு அறிவிப்பில் சலுகைகளை அறிவித்த உடன் நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை இரண்டு ரூபாய் ஏறி விட்டதால் பணம் போதாமலும், புதிய 2000 நோட்டுக்கு சில்லறை கிடைக்காமலும் திரும்பி வந்துவிட்டார். விரைவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து பெட்ரோல் விலையை ரிலையன்ஸ் எண்ணெய் நிறுவனம் போன்ற மோடியின் நண்பர்கள் அதிரடியாக 20 ரூபாய்க்கும் கீழ் குறைத்தவுடன் தன் வாக்குறுதியை நிறைவற்றுவார் என்று எதிர்பார்க்கிறேன். அதற்குள் எந்திரன் ரிலீஸ் ஆகிவிட்டால், மோடிக்கு சிறப்புக் காட்சி ஏற்பாடு செய்து அவரது கடைசி ஆசையை நிறைவற்றுவேன்.” என்று தியானத்தில் ஆழ்ந்தார்.

பகிர்

There are no comments yet